427
 

(அ. சி.) அந்தம் வயிரவி - வயிரவிக்குக் கலைகள் பதினாறு. சிந்தைக் கலசம் - சித்தமாகிய தத்துவம்.

(2)

1053 .ஆகின்ற மூவரும் அங்கே அடங்குவர்
போகின்ற பூதம் பொருந்து புராதரர்
சார்கின்ற சார்வுழிச் சாரார் சதிர்பெறப்
போகுந் திரிபுரை புண்ணியத் தோரே.

(ப. இ.) வயிரவியாகிய பேராற்றலினிடத்துப் படைப்போன் காப்போன் துடைப்போனாகிய முத்தேவரும் அடங்குவர். தோன்றி மறையும் மண்முதற் பூதங்கள் அங்கே ஒடுங்கும். இப் பூதங்களுடன் இயைந்து வினைக்கீடாக உலவும் தொன்மை வாய்ந்த ஆருயிர்கள் உண்மை யுணர்ந்து இப் பிறப்பினிற் சாராது அம்மையாகிய வயிரவியைச் சார்தல்வேண்டும். உடலைச் சாராது வயிரவி அம்மையின் திருவடியைச் சார்வோர், புண்ணியப் பேற்றினையுடைய பெரியவராவர். சதிரர் - செயற்கரிய செய்த பெரியோர். புண்ணியம் - நற்றவம்.

(அ. சி.) ஆகின்ற மூவர் - பிரமன், மால், உருத்திரர். போகின்ற பூதம் - அழிவெய்தும் மண் முதலிய பூதங்கள். புராதரர் - உயிர்கள்.

(3)

1054. புண்ணிய நந்தி புனிதன் திருவாகும்
எண்ணிய நாட்கள் இருபத்தேழ் சூழ்மதி
பண்ணிய வன்னி பகலோன் மதியீறு
திண்ணிய சிந்தைதன் தென்னனு மாமே.

(ப. இ.) ஆருயிர்களுக்கு இன்ப வாழ்வுநல்கும் இயல்பினால் புண்ணியன் என்பர். ஆக்க நிலைக்களமாதலின் நந்தி என்பர். இயற்கைத் தூயோனாதலின் புனிதன். குறைவிலா நிறைசெல்வன் ஆதலின் திருவாகும் என்பர். விண்மீனாகிய நாட்கள் இருபத்தேழும், அவை சூழ்ந்த நடுவில் திகழும் திங்களும், விறகு முதலியன பற்றி ஒளிதரும் தீயும், ஞாயிறும் ஆகிய இப்பொருள்கள் முடிந்தமுடிவாக விளங்கும் பேரறிவுப் பொருளாகிய தென்னன் என்று சிறப்பித்துச் சொல்லப்படும் சிவபெருமான் திருவுள்ளத்தால் ஆக்கப்பெற்றன.

(அ. சி.) திரு ஆகும் - எல்லாச் செல்வங்களும் ஆகும். நாள் - மீன். தென்னவன் - சிவன்; தென்பாண்டி நாட்டான். (இப் பெயரை மாணிக்கவாசகர் எடுத்து ஆண்டுள்ளார்.)

(4)

1055 .தென்னன் திருநந்தி சேவகன் தன்னொடும்
பொன்னங் கிரியிற் பூதலம் போற்றிடும்
பன்னும் பரிபிடி யந்தம் பகவனோ
டுன்னுந் திரிபுரை ஓதிநின் றானுக்கே.

(ப. இ.) அழகிய சிவபெருமான், திருநந்தியாகிய காவலனாவான். அவனொடும் திருவெள்ளிமலையில் அனைத்துலகும் காத்தருளும் பெண் யானையனைய அம்மை வீற்றிருக்கின்றாள். திருவடிப்பேறுன்னித்