1105
 

பேரன்பர் திருவுள்ளத்தின்கண் வெளிப்பட்டிருந்தருளித் தெளிவினை நல்கும் முழுமுதலும் அச் சிவபெருமானே யாவன். இவையனைத்தும் ஆருயிர்கட்குக் கைவருவது அப் பெருமானார் செய்தருளும் திருக்கூத்தினைக் கண்டு கும்பிட்ட திருப்பேற்றின் பயனாலாகும்.

(அ. சி.) ஒளியாம் பரம் - ஞானமாகிய பரம். உளதாம் பரம் - சத்தாகிய பரம். அளி - கருணை. சிவகாமி - சிவானந்த சத்தி. களியார் பரம் - ஆனந்தமாகிய பரம். நட்டத்தின் சித்தி - சிவானந்தக் கூத்தின் பயனும்.

(3)

2681. ஆன நடமைந் தகள சகளத்தர்
ஆன நடமாடி ஐங்கரு மத்தாக
ஆன தொழிலரு ளாலைந் தொழிற்செய்தே
தேன்மொழி பாகன் திருநட மாடுமே.

(ப. இ.) தனக்கெனத் திருவுருவம் இல்லாத சிவபெருமான் ஆருயிர்களின் பொருட்டுத் திருவுருக் கொண்டருள்வன். அத் திருவுருவும் மாயாகாரியமாகிய நம்மனோர் பருவுருவம் போன்றதன்று. அவன் மேற்கொள்ளும் திருவுருவம் திருவருளிற் கொள்ளும் திருவுருவம் ஆகும். கல் முதலிய பொருள்களால் அமைக்கப்பட்ட திருவுருவம் நீரில் கலக்குங்கால் கரையாது வேறுபட்டு அடியிற் சென்று விளங்கித் தோன்றும். நனிமிக இனிக்கும் இனியதோர் கற்கண்டால் செய்த திருவுருவம் நீரிற் கரையுங்கால் வேறுபடாது ஒன்றாகிக் கரைந்துவிடும். அதுபோல் மாயாகாரிய வுருக்கள் திருவருள் வெளியில் ஒன்றாய்க் கரையாது வேறுபட்டு நிற்கும். அருளுரு அத் திருவருள் வெளியில் கரைந்து ஒன்றாகிவிடும். அவன் அருட்பெருங் கூத்தினை ஒருவாது இயற்றுகின்றனன். அதுவும் ஆருயிர்களின் நன்மையின் பொருட்டேயாகும். அவன் திருவருளால் புரியும் திருத்தொழில்கள் ஐந்து. அவை முறையே, படைத்தல், காத்தல், துடைத்தல், மறைத்தல், அருளல் என்ப. அவன் தேன்போலும் இனிமையும் நன்மையும் கனிமையும் அமைந்த மொழிகளையுடைய அம்மையைச் செம்பாகமாகவுடைய திருவுருவினன். அவ் வுருவினைக் கொண்டே அவன் திருக்கூத்தியற்றுகின்றனன்.

(அ. சி.) அகள சகளத்தர் - உருவம் இல்லாதவர் உருவத்தோடு கூடி, ஐங்கருமத்தாக - படைப்பாதி ஐந்து தொழில்களுக்காக. அருளால் - அருட்சத்தியைக்கொண்டு.

(4)

2682. பூதாண்ட பேதாண்ட போகாண்ட யோகாண்ட
மூதாண்ட முத்தாண்ட மோகாண்ட தேகாண்ட
தாகாண்ட மைங்கரு மத்தாண்ட தற்பரத்து
ஏகாந்த மாம்பிர மாண்டத்த என்பவே.

(ப. இ.) அண்டங்கள் ஒன்பது வகைப்படும். அவை ஐம்பெரும் பூதங்களானாகிய அண்டமும், அவற்றின் வேறுபட்டவையாய்க் காணப்படும் பேத அண்டமும், ஆங்காங்கே இருவினைக் கீடாக இன்ப துன்பம் நுகரும் நுகர்வண்டமும், செறிவினர் சேர்ந்து பயன் துய்க்கும் யோக அண்டமும், இவை யனைத்தையும் பரவி மேலாக நிற்கும் மூதாண்டமும், திருவடிப் பேற்றின் சிறப்பினையருளும் முத்தாண்டமும். இத் திருவடிப்பேற்றின்கண்