முதல் அப் பிண்டம் பத்துத் திங்கள் காறும் வளர்ச்சியுறும். சித்திகள் - நிறைவேற்று முறைகள். பிண்டம் - உடல். பேறு - செல்வம். இழவு - வறுமை. மூப்பு - உயர்வு. சாக்காடு - இழிவு. பிணி - துன்பம். (அ. சி.) உடம்பினிலாகிய ஆறு - பேறு, இழவு, நரை, திரை, மூப்பு, சாக்காடு. பிறியீர் - பிரித்து அறிவீர். (18) 454. உடல்வைத்த வாறும் உயிர்வைத்த வாறும் மடைவைத்த ஒன்பது வாய்தலும் வைத்துத் திடம்வைத்த தாமரைச் சென்னியுள் அங்கிக் கடைவைத்த1 ஈசனைக் கைகலந்2 தேனே. (ப. இ.) சிவபெருமான் முன் ஓதியவாறு உடல் வைத்தருளினன். அதனுடன் ஆருயிர்களை வினைக்கீடாக இணைத்து வைத்தருளினன். மடைபோல் அமைக்கப்பட்ட ஒன்பது வாயில்கள் இணைத்தருளினன். உச்சியினுள் ஆயிர இதழ்த்தாமரை நிலைக்களமும் அமைத்தருளினன். பேரொடுக்கத்தைச் செய்யும் பெரும்பொருளாகிய சிவபெருமான் அந்தம் என்று அழைக்கப்படுகின்றனன். அதுவே இங்குக் கடைவைத்த ஈசன் என்று ஓதியருளினர். திருவருளால் அச் சிவபெருமானை இடையறாது நினையும் நற்றவ ஒழுக்கத்தை மேற்கொண்டனன். இதுவே இங்குக் கைகலந்தேன் என்று ஓதப்பெற்றது. (19) 455. கேட்டுநின் றேன்எங்குங் கேடில் பெருஞ்சுடர் மூட்டுகின் றான்முதல் யோனி மயனவன் கூட்டுகின் றான்குழம் பின்கரு வையுரு நீட்டிநின் றாகத்து நேர்பட்ட வாறே. (ப. இ.) நூலுணர்வாரும் நுண்ணுணர்வாரும் ஓதும்முறையைக்கேட்டு நின்றேன். அவர்கள் கூற்று வருமாறு : எஞ்ஞான்றும் யாண்டும் கேடில்லாது நின்று விளங்குபவன் பெருஞ்சுடராகிய சிவபெருமான். அவன் ஆருயிர்களை வினைக்கீடாக உலகு உடல்களிற் பொருந்தும் வினைமுதற் காரணன் ஆவன். குழம்புபோன்ற கருவைக் கூட்டி வைக்கின்றனன். அதனை உருவாக்குகின்றனன். உடலை வளர்க்கின்றனன். அவ்வுடலுடன் கலப்பால் ஒன்றாக இயைந்து நின்றருளினன். சேர்ந்திருக்கும் தன்மையினை நேர்படல் என்ப. முதல் யோனி: வினைமுதற் காரணம். (20) 456. பூவுடன் மொட்டுப் பொருந்த அலர்ந்தபின் காவுடைத் தீபங் கலந்து பிறந்திடும் நீரிடை நின்ற குமிழி நிழலதாய்ப் பாருடல் எங்கும் பரந்தெட்டும் பற்றுமே. (ப. இ.) பூவாகிய கருப்பையினுள் மொட்டாகிய விந்துக்குறி பொருந்த அப் பூவிரியும். விரிந்தபின் சுமையாயுள்ள குடும்ப விளக்குப்
1. அவனவ. சிவஞானபோதம், 1. 2. கருவாய்க். அப்பர், 4. 65 - 6.
|