முயன்றும் காண ஒண்ணாது நீங்கி மறைந்துநின்றனன். ஒருச்சி: ஒருவியென்பதன் திரிபு. ஒருவி - நீங்கி. (அ. சி.) ஒருச்சி - விலகி, நீங்கி, ஒருவி. (2) 1432. பூவினிற் கந்தம் பொருந்திய வாறுபோற் சீவனுக் குள்ளே சிவமணம் பூத்தது ஓவியம் போல உணர்ந்தறி வாளர்க்கு நாவி யணைந்த நடுதறி யாமே.1 (ப. இ.) மலரின்கண் மணம்பொருந்தியமைவதுபோல் ஆருயிரின் கண்ணும் அன்னையத்தனாம் சிவமணம் பூத்தமைந்தது. அவ்வமைவினையுடையார், புனைந்த சித்திரம்போல் அச் சிவனையே உணர்ந்தறிவர். அப்படி அறிகின்றவர் புனுகுப்பூனை அணைந்தநடுதறிபோன்று அசையா திருப்பர். நாவி - புனுகுப் பூனை. (3) 1433. உய்ந்தனம் என்பீர் உறுபொருள் காண்கிலீர் கந்த மலரிற் கலக்கின்ற நந்தியைச் சிந்தை யுறவே தெளிந்திருள் நீங்கினால் முந்தைப் பிறவிக்கு2 மூலவித் தாமே. (ப. இ.) உயிர்க்குயிராய் உண்ணின்று உணர்த்திவரும் முதன்மை வாய்ந்த சிவபெருமானைக் கண்டவரே உய்வர். அங்ஙனம் உய்ந்தனம் என்று உணராதிருக்கின்றீர்கள். மணங்கமழும் நல்லார்தம் நெஞ்சத் தாமரையில் கலக்கின்ற நந்தியை, உங்கள் உள்ளம் பொருந்தத் தெளியுங்கள். தெளிந்தால் இருள் நீங்கும். இருள் நீங்கினால் நுண்ணுடலாகிய கருவுறாது தோன்றும் முதற் பிறவியை ஒழிப்பதற்கு அத் தெளிவு அழியாக் காரணமாகும். வித்து - காரணம். (அ. சி.) உறுபொருள் - அடைதற்கு உரிய பொருள். முந்து அப்பிறவிக்கு மூல அவித்தாகும் - உண்டாகும் பிறவிகள் இல்லையாகும். (4) 1434. எழுத்தொடு பாடலும் எண்ணெண் கலையும் பழித்தலைப் பாசப் பிறவியும் நீங்கா வழித்தலைச் சோமனோ டங்கி யருக்கன் வழித்தலைச் செய்யும் வகையுணர்ந் தேனே.3 (ப. இ.) இலக்கண இலக்கியங்களும். இவற்றின் விரிவான அறுபத்து நான்கு கலைகளும், பழித்தற்கிடமாகிய சுட்டுணர்வாகும் அச் சுட்டுணர்வாகிய பாசத்தினால் தொடரும் பிறவியும், நீங்காத முறைமை வாயந்த் இடப்பால் நரம்பாகிய திங்களும், வலப்பால் நரம்பாகிய ஞாயிறும், நடுப்பால் நரம்பாகிய தீயும் அருளான் அமையும் நிலைகளை
1. மாதினையோர். அப்பர், 6. 61 - 1. 2. பிறப்பொக்கும். திருக்குறள், 972. 3. மூவகை. சிவஞானசித்தியார், 1 1 - 26.
|