(அ. சி.) பொசித்தற் பயனாக - சாப்பாட்டுக்காக உய்வேடம் ஆகும் உணர்ந்து அறிந்தோர்க்கு - பொய்வேடத்திற்கே உலகத்தில் மரியாதையும் சோறும் கிடைக்கின்றனவே, மெய்யாகவே வேடம் பூண்டால் பலன் அதிகம் உண்டு. அம்மையினும் இன்பம் உண்டு என்று அறிவார்க்கு அப் பொய் வேடமே அவன் உய்வதற்கு உதவும் வேடமாகும். (6)
9. தவவேடம் 1633. தவமிக் கவரே தலையான வேடர் அவமிக் கவரே யதிகொலை வேடர்1 அவமிக் கவர்வேடத் தாகாரவ் வேடந் தவமிக் கவர்க்கன்றித் தாங்கவொண் ணாதே.2 (ப. இ.) திருவடியுணர்வுக்கு வாயிலாகிய நற்றவமிக்கவரே தலையான சிவக்கோலமுடையவராவர். தவமில்லாத அவமாகிய பாவச் செயல் மிக்கவரே கொடுங்கொலைக்கு ஒரு சிறிதும் நடுங்காத வனவேடராவர். சிவக்கோலமாகிய தவக்கோலமிக்கவரே அக் கோலத்தைத் தாங்குந் தகுதியினராவர். மற்றவர்கள் அக் கோலத்தைத் தாங்குந் தகுதியுடைய வரல்லர். (அ. சி.) தலையான - சிறந்த. (1) 1634. பூதி யணிவது சாதன மாதியிற் காதணி தாம்பிர குண்டலங் கண்டிகை3 ஓதி யவர்க்கும் உருத்திர சாதனந் தீதில் சிவயோகி சாதனந் தேரிலே. (ப. இ.) சிவ அடையாளங்களுள் முதன்மை வாய்ந்தது திருவெண்ணீறு. அதனை 'அழகினுக்கு அணியாம் வெண்ணீறு அஞ்செழுத்து ஓதிச் சாத்தல்' என்பதனால் உணரலாம். இத் திருவெண்ணீறு உடம்பின்கண் பலவேறிடங்களில் அணியப்படுவது. செம்பொன்னாலாக்கிய குண்டலங்கள் இரண்டு காதுகளிலும் காணப்படும். வண்டனைய சிவமணிகள் முப்பத்திரண்டு கொண்ட கண்டிகை மார்பிடத்துக் காணப்படும். இனம்பற்றி நாவின்கண் 'சிவசிவ' என்னும் திருவைந்தெழுத்து வழுத்தப்படுதலும் கொள்க. இவையே சிவ அடையாளங்களாகும் குற்றமற்ற செறிவு நிலையாகிய சிவயோகிக்கும் இவையே அடையாளங்களாகும். செம்பொன் - தாமிரம். வண்டனைய - வண்டு போலும் பருமனான. (அ. சி.) பூதி - விபூதி. வி: உபசர்க்கம். புழுதி என்னும் சொல் இடைக்குறைந்து முதல் நீண்டு பூதி என்று ஆயிற்று. ஆதியில் - முதலில்.
1. தவமறைந். திருக்குறள், 274. 2. தவமுந். " 262. 3. சந்த. 12. ஞானசம்பந்தர், 1194.
|