33. சோதனை 2589. பெம்மான் பெருநந்தி பேச்சற்ற பேரின்பத்து அம்மா னடிதந் தருட்கடல் ஆடினோம் எம்மாய மும்விடுத் தெம்மைக் கரந்திட்டுச் சும்மா திருந்திடஞ் சோதனை 1யாகுமே. (ப. இ.) யாவர்க்கும் மேலாம் அளவிலாச் சீருடைப்பெருமான் சிவன். அவனே ஒப்பற்ற பெருமைசேர் நந்தியும் ஆவன். மாற்றமும் மனமும் செல்லா ஏற்றமாம் பேரின்பத்து அம்மானும் அவனே. அவன் திருவருட் கடலில் ஆடினோம். அதனால் அவனருளால் எவ்வகை மாயமருளையும், அதற்கு ஆக்கந்தரும் இருளையும், உழல்விக்கும் அழலனைய இருவினையயும் ஒருங்கு விடுத்தனம். யான் எனது என்னும் பற்றே, யாம் எனப் பெயர்பெறும். அதனையும் அகற்றினம். அதனால் எம்மைக் கரந்திட்டனம் என்றனர். இந்நிலையில் 'அவனருளால் அல்லது ஒன்றையும் செய்யானாகவே அஞ்ஞான கன்மம் பிரவேசியாகலான்' என்னும் மெய்கண்டார் திருவருண் மொழிக்கிணங்க அவ்வுயிர் நிற்கும். அதனால் அவ்வுயிர் சும்மா இருக்கிறது என்னும் பொருளில் சும்மா என ஓதினர். செயலொழிவுபெற்று இருக்கும் இடமே திருந்திய இடமாகும். இதனையே அறுவழி ஆய்வு என்பர். அறுவழி ஆய்வு எனினும் அத்துவ சோதனை எனினும் ஒன்றே. (அ. சி.) எம் மாயமும் - எவ்வகைப்பட்ட மாயா சம்பந்தங்களையும். எம்மைக் கரந்திட்டு - தான் என்பது அற்று. திருந்திடம் - திருத்தமுற்று இருக்குமிடம். (1) 2590. அறிவுடை யானரு மாமறை யுள்ளே செறிவுடை யான்மிகு தேவர்க்குந் தேவன் பொறியுடை யான்புலன் ஐந்துங் கடந்த குறியுடை யானொடுங் கூடுவன் 2நானே. (ப. இ.) இயல்பாகவே விளங்கும் உண்மைப் பேரறிபு உடையவன் சிவன். அவனே அருமாமறையாகிய திருவைந்தெழுத்தின் நிறைவாயுள்ளான். பெருந்தேவரென்று பேசப்படும் யாவர்க்கும் பெருந்தேவனாகவுள்ளான். புண்ணிய வடிவானவன். பொறிவாயில் ஐந்தவித்த புலவன். அப்பெருமான் திருவடிக்கண் அவன் திருவருளால் அடியேன் அன்பாற் கூடியின்புறுவன். குறியுடையான் - புலவன். (அ. சி.) பொறியுடையான் புலனைந்தும் கடந்த குறியுடையான் பொறி வாயிலைந்து அவித்தான். (2)
1. மூன்றுதிறத். சிவஞானசித்தியார், 8. 1 - 10. " பொன்னிமையப். 12. திருக்குறிப்புத்தொண்டர், 115. " செம்மான். கந்தரனுபூதி, 12. 2. பொறியின்மை திருக்குறள், 618.
|