(ப. இ.) திருவடிசேர்ந் தின்புறுதற்குச் சிறந்தவாயில் பத்தியொன்றேயாம். மெய்ம்மையாம் உழவைச் செய்து அப் பத்தியினை விதைத்தல்வேண்டும். அஃது அன்பு நீரால் பயிராகி வளரும் நாணமென்று சொல்லப்படும். களையினைச் சித்தினைப் பயக்கும் வயிராக்கியமாகிய பற்றறுதியினால் அறுத்தல்வேண்டும். களைகட்டவே சிவானந்தத்துச் செலுத்தும். செயலறலாகிய சமாதிக்காவல் காத்தல்வேண்டும். காக்கவே சிவபோகம் விளையும். விளையவே சிவனடி நீங்கா நினைவாகிய அப்போகத்தை அருளால் உண்டிடுதல் வேண்டும். உண்ணவே கைகூடித் திகழும் திருவடிப்பேறு, பேரின்பவிளைவாய்ப் பெருகி நிலைக்கும். வயிராக்கியம் வயிராக்கம் என நின்றது செய்யுட்டிரிபு. (43)
9. ஆகாசப் பேறு (அருள் வெளிப்பேறு) 2759. உள்ளத்து ளோமென ஈசன் ஒருவனை உள்ளத்து ளேயங்கி யாய வொருவனை உள்ளத்து ளேநீதி யாய வொருவனை உள்ளத்து ளேயுடல் ஆகாய மாகுமே. (ப. இ.) திருவருளால் உள்ளத்துள் ஒம் என்று ஓவாது கணிக்க ஒப்பில் இறைவன் அப்பொழுதே எழுந்தருள்வன். அவன் அவ்வோ மொழியுருவாய் நிற்பன் என்றும் உணர்க. அவனை உள்ளத்தின்கண் அறிவொளிப் பிழம்பாய் நிற்கின்றான் எனத் தெளிக. அவனை 'நெஞ்சத்துள்நின்று நினைப்பிக்கும் நீதியை' உடையான் உன நேர்க. அவன் ஒப்பில் ஒருவன். அவன் உள்ளத்துள் திகழ்கின்றமையால் அவ்வுள்ளமமைந்தவுடல் அறிவுவெளியாக விளங்கும். (அ. சி.) உள்ளத்துள் ஓம் என - உள்ளத்தில் ஓம் என்று உணர. உடல் ஆகாயம் - உடல் சிதாகாயமாக விளங்கும். (1) 2760. பெருநில மாயண்ட மாயண்டத் தப்பால் குருநில மாய்நின்ற கொள்கையன் ஈசன் பெருநில மாய்நின்று தாங்கிய தாளோன் அருநிலை யாய்நின்ற ஆதிப் 1பிரானே. (ப. இ.) முழுமுதற் சிவபெருமான் கலப்பினால் பெருநிலமாகவும், அண்டமாகவும், அண்டத்து அப்பாலுள்ள சிறந்த நிலமாம் மாயையாகவும் தோற்றம் அளித்து நிற்கும் தூக்கொள்கையையுடையவன். எல்லாவற்றையும் பெருநிலம்போன்று ஒருங்கு தாங்கி நிற்கும் பெருந்தாளோன் ஆவன். அவனே பொருட்டன்மையில் காண்டற்க அரிய நிலையாக நிற்கும். ஆதிப்பிரானாவன். ஆதிப்பிரான் என்பது ஆதியையுடைய பிரான் என்க. குரு - சிறப்பு. தூ - பற்றுக்கோடு. (அ. சி.) அண்டத்தப்பாற் குருநிலம் - மாயை. (2)
1. வித்துண்டா. சிவஞானபோதம், 1. 2 - 2. " பார்கொண்டு. அப்பர், 4. 82 - 1.
|