692
 

(ப. இ.) உலகியலாகிய அன்பியலிலும், வீட்டியலாகிய அருளியலிலும் தனித்தனி ஒழுகுவோன் அவன் அவன் என இருமுறை ஓதப்பட்டுள்ளான். அவ்விருவரும் அவனாகிய சிவனை ஆராய்ந்தறிவரே யன்றி அழுந்தியறியார். அவனாகிய சிவனை அழுந்தியறியில், ஆருயிரின் சிற்றுணர்வு இல்லை. அவ்வுயிர்க்குச் சிவனது முற்றுணர்வேயுண்டு. அதனால் சிற்றுணர்வு நிலையாம் அறிவானும் இல்லை. அவனை அவனருளால் உணர்வார் பேற்றியலாகிய இன்பியலினராவர். இவர்களே ஞான நெறியினராவர். இந் நெறியினரை யொப்ப அன்பியல் அருளியலாகிய இருநெறியினரும் காண்பரேல் அவர்களும் அவனருளால் அவனேயாவர். அதுவே அவனிவனாம் என்று ஓதியது. அன்பியலாரைக் கன்மகாண்டி என்றும், அருளியலாரைப் பத்திகாண்டி என்றும் கூறுப. அவன் எனப், பலகால் வருவது சொற்பொருள் பின்வரும் நிலை என்னும் அணி.

(அ. சி.) அவனும் அவனும் - கன்மகாண்டியும் பத்திகாண்டியும். அவனை அறியில் - சிவனை அறியில். அறிவானும் இல்லை - சீவபோதம் இல்லையாம். அவனிவன் - சிவபோதத்தை அடைந்தவர்கள்.

(12)

1759. நானிது தானென நின்றவ னாடோறும்
ஊனிது தானுயிர் போலுணர் வானுளன்
வானிரு மாமுகில் போற்பொழி 1வானுளன்
நானிது வம்பர நாதனு மாமே.

(ப. இ.) சிவன் ஆருயிர்மாட்டு வைத்த பேரளியால் உடம்பைத் தான் எனக் கருதும் உயிர்போல் அவ்வுயிரைத் தானெனக் கருதி நாடொறும் உணர்வன். கைம்மாறு கருதா மழைபோல் அருள் மழை பொழிவன். அம் முறையால் ஆருயிரும் அறிவுப் பெருவெளியாகிய பரமாகாயத்துக்கு முதல்வனாகும் என ஏற்றியுரைப்பர். ஏற்றுரை - முகமன், உபசாரம். பேரளி - பெருங்கருணை.

(அ. சி.) நான் இது தானென்ன - சீவனோடு ஒன்றித்தாய். ஊனிது தானுயிர் போல் - உடலைத் தானென்றிருக்கும் உயிரைப் போல. இருமாமுகில் போல் கைம்மாறு கருதாது பொழியும் மேகத்தை போல.

(13)

1760. பெருந்தன்மை தானென யானென வேறாய்
இருந்தது மில்லைய தீசன் அறியும்
பொருந்தும் உடலுயிர் போலுமை மெய்யே
திருந்தமுன் செய்கின்ற தேவர் பிரானே.

(ப. இ.) பெருந்தன்மையாகிய தான் என்னும் சிவனும், யான் என்னும் உயிரும் இடத்தால் வேறுபட்டு இருந்ததில்லை; கலப்பால் ஒன்றாகவே யிருந்தனம். இவ்வுண்மை திருவடி யுணர்வுபெற்றுச் சிவனாயினார் யாவரும் அறிவர். ஆருயிர்க்கு மாயாகாரியமாகிய உடலிருப்பதுபோல் உடையானுக்குத் திருவருளாகிய திருமேனி யுளது. அத் திருமேனியும் இயல்பாகவே யமைந்த திருந்திய திருமேனியாகும். அதனால் யாவரையும் திருந்தச் செய்கின்றனன் சிவன்.


1. ஏகமாய். சிவஞானபோதம், 11. 1 - 2.