722
 

மலையுச்சியின் தன்மைகளும், ஒன்றோடொன்று நெருங்குதற்கரிய பலவேறு அண்டங்களும், அவ்வவ் அண்டங்களில் வாழும் அமரரும், அவர்களை இயக்கும் காரணரும், எட்டுப்புலங்களில் உள்ளாரும் திருவருட்டுணையால் நாடுங்கால் என் அறிவின்கண் செவ்விதிற் புலனாகா நின்றனர். இந் நிலையே அருள்கை வந்த மெய்ந்நிலையென்பர். இந் நிலை எய்தின் நாம் உய்ந்தவராவோம்.

(அ. சி.) அண்டரும் - அண்டு + அரும்; அடைதற்கு அரிய.

(3)

1834. அண்டங்கள் ஏழும் அகண்டமும் ஆவியுங்
கொண்ட சராசர முற்றுங் குணங்களும்
பண்டை மறையும் படைப்பளிப் பாதியுங்
கண்ட சிவனுமென் கண்ணன்றி 1யில்லையே.

(ப. இ.) ஞாயிற்றினைச் சூழ்ந்து சுழலும் எழுவகைக் கோள்களும், வேறு விரிந்த நிலைகளும், அவ்வந் நிலைகளிலுள்ள ஆவிகளும், ஆங்காங்குள்ள இயங்குதிணை நிலைத்திணை உயிர்களும், அவ்வவற்றின் பண்புகளும், பண்டைத்தமிழ் நான்மறையும், படைத்தல் காத்தல் முதலிய திருவருட்டொழில்களும் சிவபெருமான் என்னுடன் விளங்கி நின்று என் அறிவின்கண் காட்டுதலால் அவை அனைத்தின் உண்மைகளும் அடியேன் அறிவின்கண் செவ்விதிற் புலனாகா நின்றன.

(அ. சி.) அண்டங்கள் ஏழும் - நாம் இருக்கும் இச் சூரிய மண்டலத்தைச் சேர்ந்த ஏழு கோள்களும். அகண்டமும் - வேறு பல அண்டங்களும். பண்டைமறை - தமிழ் மொழியில் முன்னிருந்த மறைகளும், என் கண் அன்றி - என் உள்ளத்தின்கண் அன்றி.

(4)

1835. பெண்ணல்ல ஆணல்ல பேடல்ல 2மூடத்துள்
உள்நின்ற சோதி ஒருவர்க் கறியொணாக்
கண்ணின்றிக் காணுஞ் செவியின்றிக் 3கேட்டிடும்
அண்ணல் பெருமையை ஆய்ந்தது மூப்பே.

(ப. இ.) இருவினைக்கீடாகத் தரப்படும் பருமையான உடம்பின் கண்ணே ஆண், பெண், பேடு என்ற குறி வேறுபாடுகள் காணப்படுமேயன்றி, உயிரின்கண் அவை ஒருசிறிதும் காணப்படா. ஆயின் இறைவன் மாட்டு அவை காணப்படும் என்பது எங்ஙனம் பொருந்தும்? இறைவன் ஆண், பெண், பேடு என்பவற்றுள் ஒன்றும் அல்லன். அவன் ஆருயிரின் அகமாகிய நெஞ்சத்தினுள் மறைந்தும் அறிவுப் பேரொளியாகத் திகழ்கின்றனன். ஆயினும் அவனருளாலன்றித் தம்மறிவால் ஒருவர்க்கும் அறியவொண்ணாதவன். அவன் கருவிகளின் துணையின்றியே நிறைந்தும் கலந்தும் எல்லாம் அறிவாற்றலான் உணர்வன். அதனால் அவன் கண்ணின்றிக் காண்பன், செவியின்றிக் கேட்பன். இவையே 'பொறி


1. சூரியகாந். சிவஞானசித்தியார், 8. 2 - 18.

" பண்டைமறை. சிவஞான சித்தியார் - மெய்கண்டார் வாழ்த்து.

2. சத்தியும் " 1. 3 - 14.

3. கேட்டாரும். 8. திருச்சதகம், 28.