893
 

2214. சாக்கிர சாக்கிரந் தன்னிற் கனவொடுஞ்
சாக்கிரந் தன்னிற் சுழுத்தி துரியமே
சாக்கிரா தீதந் தனிற்சுகா னந்தமே
ஆக்கு மறையாதி ஐம்மல பாசமே.

(ப. இ.) நனவில் நனவு, நனவிற் கனவு, நனவின் உறக்கம், நனவிற் பேருறக்கம் நனவின் உயிர்ப்படங்கல் ஆகிய ஐந்தும் துன்பில் இன்பாய் மன்னும். ஆணவம், கன்மம், மாயை, மாயை ஆக்கம், நடப்பாற்றல் ஆகிய ஐம்மலப் பிணிப்பும் மறையாது அகலும்.

(28)

2215. சாக்கிரா தீதத்திற் றானறு மாணவஞ்
சாக்கிரா தீதம் பராவத்தை தங்காது
ஆக்கு பரோபாதி யாஉப சாந்தத்தை
நோக்கு மலங்குண நோக்குத லாகுமே.

(ப. இ.) நனவின் அப்பாலாம் சாக்கிராதீதத்திற் றன்முனைப்பாம் ஆணவம் அறுதல் உண்டாம். இந்நிலை அருளில் தங்கும் நிலைக்கும் அப்பாலாகும். அருளையுடைய பெரும்பொருள் பரோபாதி. அது சிவம். இந்நிலை அச் சிவத்தை ஆருயிர்கள்மாட்டு விளங்கச்செய்யும்; எல்லாவற்றையும் திருவடியின்பினில் மூழ்குவிக்கும் சிவனடியினையே நோக்குவிக்கும். நோக்கும் என்பது பிறவினைப் பொருளில் வந்த தன்வினை. இந்நிலை எய்தினானை மலங்குணம் ஏதும் நோக்குதல் அமையாது. ஆகுமே : ஏகாரம் எதிர்மறை; ஆகாது என்பது பொருள். யா : அஃறிணைப் பன்மை; எஞ்சாது எல்லாமும் என்பது பொருள்.

(அ. சி.) பராவத்தை - பரையினிடத்துத் தங்கும் அவதாரம். பரோபாதி - பரசிவ சம்பந்தம்.

(29)

2216. பெத்தமும் முத்தியும் பேணுந் துரியமுஞ்
சுத்த வதீதமுந் தோன்றாமற் றுானுணும்
அத்தன் அருளென் றருளால் அறிந்தபின்
சித்தமும் இல்லை செயலில்லை தானே.

(ப. இ.) கட்டும் வீடும் நல்லோரால் பேணப்படும் துரியமாகிய ஒடுக்கமும், தூய்மையாகிய அப்பால் நிலையும் திருவருளால் ஒருசிறிதும் தோன்றாவாகும். தான் நுகர்ந்து கொண்டிருப்பது அத்தன் சிவபெருமானின் திருவடியின்பம் என்றருளால் அறிவன். அறிந்தபின் எண்ணமாகிய சித்தத்தின் இயக்கம் இல்லை. அஃது இல்லையாகவே வேறு எச்செயலும் இல்லை. தானே: தான், ஏ - அசை.

(30)

2217. எய்திய பெத்தமும் முத்தமும் என்பன
எய்தும் அரனரு ளேவிளை யாட்டோடு1
எய்தி டுயிர்சுத்தத் திடுநெறி என்னவே
எய்தும் உயிரிறை பாலறி வாகுமே.


1. ஏற்ற இவை. சிவப்பிரகாசம், 18.