510
 

அதனை ஒடுக்குபவனும் சிவனே. அவன் திருவடியை அடைய முயல்வீர்களாக.

(அ. சி.) தேவர்கள் தேவன் - தேவ இந்திரன். பாய்புனல் - கங்கை. முரிந்திடுவான் - முரித்திடுவான் என்பது மெலிந்து வந்தது; அழிப்பவன்.

(10)

1304. நீர்பணி சக்கரம் நேர்தரு வண்ணங்கள்
பாரணி யும்ஹிரீ முன்ஸ்ரீ மீறாந்
தாரணி யும்புகழ்த் தையல்நல் லாள்தனைக்
காரணி யும்பொழிற் கண்டுகொள் ளீரே.

(ப. இ.) நீங்கள் தொழுது விழுப்பயன் எய்துதற்குரிய சக்கரம் நவாக்கரியாகும். அதன் எழுத்துக்கள் உலகம் புகழும் சிரீயும் கிரீயுமாகும் (ஸ்ரீஹிரீ) மாலையணிந்து விளங்கும் புகழ்மிக்க தையல் நல்லாள் உறையும் மேகங்கள் தங்கும் அழகு மிகுந்த சோலையாற் சூழப்பட்ட கடம்பவனத் திருவூரில் சென்று அவள் திருவடியைத் தொழுவீராக. வண்ணங்கள் - வர்ணங்கள்; எழுத்துக்கள்.

(அ. சி.) நீர் பணி - நீவிர் வணங்குகின்ற. தாரணியும் புகழ் - புகழ் மாலை அணிகின்ற.

(11)

1305. கண்டுகொள் ளுந்தனி நாயகி தன்னையும்
மொண்டுகொ ளும்முக வசியம தாயிடும்
பண்டுகொ ளும்பர மாய பரஞ்சுடர்
நின்று கொளுநிலை பேறுடை யாளையே.

(ப. இ.) ஒப்பிலாத திருநாயகி தன்னைக் கண்டுகொள்ளும் பேறுடையார் அருட்பொலி வெய்துவர். அதனால் அவர்கள் முகம் மிக்க அழகுடையதாய்க் கண்டார் அள்ளிக்கொள்ளும்படியான கவர்ச்சியைக் கொண்டிருக்கும். பழமையாக நம்மை ஆட்கொள்ளும் பண்புடைய ஈடும் எடுப்புமில்லாப் பெருஞ்சுடர் நம்மை நிலைபேறுடைய அம்மையுடன் வெளிப்பட்டு நின்று ஆட்கொள்ளும். வசியம் - கவர்ச்சி.

(அ. சி.) மொண்டுகொளும் - அள்ளிக்கொள்ளும்படியாக.

(12)

1306. பேறுடை யாள்தன் பெருமையை எண்ணிடில்
நாடுடை யார்களும் நம்வச மாகுவர்
மாறுடை யார்களும் வாழ்வது தானிலை
கூறுடை யாளையுங் கூறுமின் நீரே.

(ப. இ.) திருவடிப்பேற்றை யருளும் திருநாயகிதன் அளவிலா அருட்பெருமைகளை இடையறாது எண்ணினால் பெருநில வேந்தரும் நம் வயம் ஆகுவர். அறியாமையாலாவது காரணம் பற்றியாவது பகை கொண்டவர்கள், அப் பகைமைப் பண்புடன் நிலைத்து வாழார். (பகைமை நீங்கி உறவாகி வாழ்வர்.) அத்தன் ஒரு கூற்றிலே என்றும் உறைந்து எங்கும் நிறைந்து அன்னை நிற்பள் அவளை அன்புடன் தொழுவாயாக.