விளங்கும். முற்கூறிய கடம்பவனத்தில் எழுந்தருளியுள்ள திருவருளம்மை நெஞ்சத் தாமரையில் எழுந்தருளும் அழகிய கொடி போலும் அம்மையாகும். கா - சோலை; கடம்பவனம். (அ. சி.) காமேல் - கடம்பவனத்தில். (94) 1388. பொற்கொடி யாளுடைப் பூசனை செய்திட அக்களி யாகிய ஆங்காரம் போயிடும் மற்கட மாகிய மண்டலந் தன்னுளே பிற்கொடி யாகிய பேதையைக் காணுமே. (ப. இ.) திருவருள் அம்மையின் வழிபாட்டினை முறைப்படி செய்திடப் பிறப்புக்கு வித்தாய்ப் பெருமயக்கம் தரும் ஆங்காரமாகிய ஆணவம் அகன்றிடும். நிலைபெற்ற பெருவெளியாகிய பேரொடுக்க நிலைக்களத்தின் கண் 'சிவசிவ' என்னும் தமிழ் நான்மறையில் பிற்கொடியாகச் சிகரத்துக்குப் பின் தோன்றும் வகரமாகிய வனப்பாற்றலாம் அருளம்மை வந்து தோன்றுவள். மற்கடம்: மன்கடம் - நிலைபெற்ற பெருவெளி. (அ. சி.) அக்களி - மயக்கம் கொடுக்கின்ற; மற்கடம் - கூடம் மன்னும். (95) 1389. பேதை யிவளுக்குப் பெண்மை அழகாகுந் தாதை யிவளுக்குத் தாணுவு மாய்நிற்கும் மாதை யிவளுக்கு மண்ணுந் திலகமாய்க் கோதையர் சூழக் குவிந்திடங் காணுமே.1 (ப. இ.) பேரிரக்கம் வாய்ந்த திருவருளம்மையாகிய இவளுக்கு அனைத்துயிரையும் பேணும் பெண்மை நிறைந்த அழகாகும். இவ்வம்மைக்குச் சிவபெருமான் தாங்குந்தூணனைய தந்தையாகும். பெண்ணரசியாகிய இவளுக்கு அழகுறுத்தும் பொட்டுப் போன்று சூழக் கன்னிப் பெண்கள் பலர் சூழ்ந்திருப்பர். அவ்விடமே அம்மை கூடியிருக்கும் அருளிடமாகும். மாதை: மாது + ஐ - பெண்ணரசி. தாணு - தூண். மண்ணுதல் - அழகுறுத்தல் கோதையர் - கன்னியர். குவிந்திடம் - கூடியிருக்குமிடம். ஐ - அரசி. (அ. சி.) பெண்மை - பெண்தன்மை. மாது ஐ - பெண்களுக்குத் தேவி. மண்ணும் - அலங்கரிக்கின்ற. (96) 1390. குவிந்தனர் சத்திகள் முப்பத் திருவர் நடந்தனர் கன்னிகள் நாலெண்மர் சூழப் பரந்தித ழாகிய பங்கயத் துள்ளே இருந்தனள் காணும் இடம்பல கொண்டே. (ப. இ.) கூடியிருக்கும் ஆற்றற் செல்விகள் முப்பத்திருவர். இவர்கட்கு அகமாகச் சூழ்ந்துவரும் கன்னிப் பெண்கள் முப்பத்திருவராவர்.
1. விற்றூணொன். அப்பர், 6. 8 - 1.
|