337
 

பூவுடன் பொருந்தவைத்தால் மதிமண்டலம் மலரும். நெடுநாள் உடலகத்து வாழ்தலும் உண்டாம். அண்டம் - பரவெளி.

(அ. சி.) பரிந்த - பரித்த சரீரத்தைத் தாங்கி நிற்பதாகிய. தண்டு - வீணாத்தண்டு. அண்டம் பரிய - ஆகாயம் செல்ல. பூ - சகசிர அறை. மண்டலம் - மதிமண்டலம்.

(19)

798. மண்டலத் துள்ளே மனவொட்டி யாணத்தைக்
கண்டகத் தங்கே கருதியே கீழ்க்கட்டிப்
பண்டகத் துள்ளே பகலே ஒளியாகக்
குண்டலச் காதனுங் கூத்தொழிந் தானே.

(ப. இ.) தீ மண்டிலமாகிய மூலத்திடத்து உயிர்ப்புச் சேர ஒட்டியாணக்கட்டு என்னும் உண்மையினை ஆசான் அறிவிக்கும் முத்திரை வழியாக, உள்ளே கண்டு கீழ்ப் பகுதியினை அடைத்தல்வேண்டும். அப்படி அடைத்தால், மேல் வீடாகிய பரவெளிக்குள்ளே பகலின்கண் ஞாயிற்றின் ஒளியினும் சிறந்த அருள்ஒளி தோன்றும். தோன்றவே, ஐந்தொழிற் கூத்தனும் அவ் ஆவிக்கு அருட்காப்பு ஒன்றே புரிவன். அதனால் ஏனைத் தொழிலில் நீங்கி இருந்தனன் என்ப. மன : மன்ன என்பது இடைக்குறைந்து நின்றது : சேர. பண்டகம் - பரவெளி. குண்டலக்காதன் - கூத்தப் பெருமான்.

(அ. சி.) மண்டலத்துள்ளே - மண் தலத்துளே; உலகிலே. ஒட்டியாணம் - மூலத்துவாரத்தை முக்காரமிட்டிருத்தல். பண்டகம் - மேல் வீடு; சகசிர அறை.

(20)

799. ஒழிகின்ற வாயுவும் உள்ளே அமருங்
கழிகின்ற வாயுவுங் காக்கலு மாகும்
வழிகின்ற காலத்து வட்டக் கழலைப்
பழிகின்ற காலத்துப் பையகற் றீரே.

(ப. இ.) வெளிச்செல்லும் உயிர்ப்பும் செல்லாது அகத்தே தங்கும். உயிர்ப்புச் செல்லாமையால் வீணாகக் கழியும் வாணாள் உறுப்பாகிய உயிர்ப்பினைக் காத்தல்கூடும். மதியமிழ்தம் மூலத்திடத்து வழியாமல் நடுநாடியின் உட்டுளைவழிச் செல்லின், பயிற்சியில்லாது பழிக்கப்படுகின்ற குண்டலிப் பாம்பின் படத்தினை அடைத்தல்கூடும். அதனைச் செய்வீர்களாக.

(அ. சி.) ஒழிகின்ற - வீணாய்ப் போகின்ற. கழிகின்ற வாயு - வராமல் இருக்கின்ற 4 விரல் அளவுள்ள சுவாசம். வட்டக்கழல் - பிரமரந்திரம். பை - குண்டலியின் தலை.

(21)

800. பையினி னுள்ளே படிக்கத வொன்றிடின்
மெய்யினி னுள்ளே விளங்கும் ஒளியதாங்
கையினுள வாயுக் கதித்தங் கெழுந்திடின்
மையணி கோயில் மணிவிளக் காமே.