449
 

(ப. இ.) உலகியற்பொருள்களை உடைமையாகவும் ஆருயிர் இனங்களை அடிமையாகவும் என்றும் உடையவன் சிவன். அவனே தீயினுக்கும் ஒளிகொடுக்கும் அரனாகவுள்ளவன்; ஆனேறாகிய அறத்தினை ஊர்பவன்; சிறந்து மேனிலத்து விளங்கும் மெய்ப்பொருள். அறிவாற்றல் அன்புகளில் கடையவராயுள்ளார் இவ்வுண்மையினை அறியார். திருவருள் துணையால் அருட்கண்ணே கண்ணாகக்கொண்டு சிறப்புறக் காணும் நல்லார் தூயநெஞ்சத்துள் அவன் விளங்கியருள்வன். இவ் விளக்கமுடையாரை அடயோகப் பயிற்சியினர் என்பர். நல்லார் - ஞானிகள். சாதகர் - பயிற்சியினர்.

(அ. சி.) அங்கி உருத்திரன் - தேயு தத்துவ அதிபதியாகிய உருத்திரன். விடையவன் - இடப இலக்கினத்துக்கு உரியவன். கடையவர் போயிடும் - அறிந்துகொள்ளாதவர் தவறிவிடுவர். நெஞ்சத்..சாதகர் - அடயோகர்.

(16)

1117 .தாமேல் உறைவிடம் மாறித ழானது
பார்மேல் இதழ்பதி னெட்டிரு நூறுள
பூமேல் உறைகின்ற புண்ணியம்1 வந்தனள்
பார்மேல் உறைகின்ற பைங்கொடி யாளே.

(ப. இ.) திருவருளாற்றல் திங்கள் மண்டிலத்தும் ஞாயிற்று மண்டிலத்தும் உறையும் நிலையினை மேலிடத்து உறைவென்பர். திங்கள் மண்டிலத்தின் இதழ் கீழ்நோக்கியும், ஞாயிற்று மண்டிலத்தின் இதழ் மேல் நோக்கியும் நிற்பன. இவையே மாறிதழ்கள் என்று சொல்லப் பெறுவன. நிலத்தின்மேல் அத் திருவருள் தங்குவதற்குப் பதினெட்டிதழும் இருநூறிதழ்களும் ஆகிய தாமரைகள் உள்ளன. அப் பூமேலுறைவதற்குப் புண்ணியமாக எழுந்தருளினள், முறைமேல் நின்று நிறையும் பைங்கொடி போன்ற அருளம்மை. பார்: முன்னது நிலம் பின்னது முறை.

(அ. சி.) மாறிதழ் - இதழ்கள் கீழ்நோக்கியும் மேல்நோக்கியும் இருப்பது.

(17)

1118 .பைங்கொடி யாளும் பரம னிருந்திடத்
திண்கொடி யாகத் திகழ்தரு சோதியாம்
விண்கொடி யாகி விளங்கி வருதலாற்
பெண்கொடி யாக நடந்த துலகே.

(ப. இ.) அழகிய கொடிபோன்ற அருளம்மையும் சிவன் திருவுருக் கொண்டு விளங்கும் பொருட்டு ஆற்றல்மிக்க தொடர்ந்த பேரொளிப் பிழம்பாவள். அவள் விண்ணிலே காணப்படும் மின்னற்கொடி போன்று விளங்கி வருகின்றனள். அதனால் உலகனைத்தும் பெண்கொடி வண்ணமாய் நடந்து பிறங்குவவாயின.

'பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததை எண்ணில்,
மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்வைகலும்
எண்ணில் நல்லகதிக்கு யாதும் ஐயுறவில்லை'

என்னும் தமிழ்மறை இதனை நன்கு உணர்த்தும்.

(18)


1. விண்ணி. அப்பர், 5. 46 - 5.