முதல். அவ்விரண்டன் மூலமாகிய அருளையும் தூமாயையும் அருளால் அறிவார்க்கு அவ்விரண்டும் முறையே நன்மையினாலும் தன்மையினாலும் தூயனவேயாகும். (அ. சி.) தூய்மணி - சிவம். தூயனல் - தன்மாத்திரை வடிவம். தூர் - வேர், மூலம். (8) 2514. தூயது வாளாக வைத்தது தூநெறி தூயது வாளாக நாதன் திருநாமந் தூயது வாளாக அட்டமா சித்தியுந் தூயது வாளாகத் தூயடிச் 1சொல்லன்றே. (ப. இ.) என்றும் பொன்றாத் தன்மைசேர் இயற்கைத் தூய்மை வாய்ந்தவன் செம்பொருளாம் சிவபெருமானாவன். அவன் ஆருயிர்கள் மாட்டுவைத்த நீங்காதோங்கும் பேரருளால் கைம்மாறு கருதாது நன்னெறி நான்மைத் தூநெறி யமைத்தருளினன். இயற்கைத் தூய்மையாய் யாவற்றையும் தூய்மையாக்கும் தூயது ஒளியுடைத் திருவருளாகும். அதுவே சிவபெருமானின் திருமேனியும் திருப்பெயரும் ஆகும். அது செந்தமிழ் திருவைந்தெழுத்தாம் 'சிவயநம' என்ப. திருவைந்தெழுத்தின் பெறுபேறாம் அகம்புறம் இகவாது விளங்கும் சிவ விளக்கமாகிய விழுத்தூய்மை தன்பாலதாக, வாய்க்கப் பெறுவர். அவர் விழையின் எண்பெரும்பேறும் அவர்க்கு எண்மையாக நண்ணும். யாவற்றையும் தூய்மையாக்கும் திருவைந்தெழுத்தே வாட்படையாகக் கைக்கொண்டு இடையறாது ஒழுகுவது நடைமிகு தூநெறியாகும். அதனால் அத் திருவைந்தெழுத்தினை நெஞ்சே இடையறாது நவில்வாயாக. வாளாக - ஒளியுடையதாக. வாளாக - மெய்யுணர்வு வாட்படையாக. (அ. சி.) தூயது - சிவம். வாளாக - ஒளியுடையதாக. தூயது - சுத்தமுடைமை. வாளாம் - சித்து வடிவாம். தூயது ஆளா(க) பரிசுத்தமுடைமை தன் வசமாக. வாளா(க) - வாட்படையாக. தூயடி - நல்வழி. (9) 2515. பொருளது வாய்நின்ற புண்ணியன் எந்தை அருளது போற்றும் அடியவ ரன்றிச் சுருளது வாய்நின்ற துன்பச் சுழியின் மருளது வாச்சிந்தை மாள்குகின் றாரே. (ப. இ.) மெய்ப்பொருளாய் நின்ற விழைதகு புண்ணியன் சிவபெருமானாவன். அவனே எந்தையுமாவன். அவனது திருவருளைத் திருவைந்தெழுத்தால் போற்றுபவர் சீரிய அடியாராவர். அவரைச் சாரும் நாட்டமில்லாத பிறர் மாறிமாறிப் பின்னும் புரிபோன்றதாய் நிலைபெற்று நின்ற துன்பச் சுழியாகிய பிறவியின்கண் வீழ்ந்து துன்புறுதற்கு வாயிலாகிய மருளுடையவராவர். அவர் அம் மருளுக்கு அடிமைப்பட்ட உள்ளத்தவராவர். அதனால் என்றும் நீங்கா மயக்கத்துத் தூங்குவர். தூங்குதல் - தங்குதல். பின்னும்புரி - முறுக்கும் கயிறு.
1. படைக்கல. அப்பர், 4. 81 - 8. " ஆற்றுவா. திருக்குறள், 985.
|