245. திருத்தி வளர்த்ததோர் தேமாங் கனியை அருத்தமென் றெண்ணி அறையிற் புதைத்துப் பொருத்தமி லாத புளிமாங்கொம் பேறிக் கருத்தறி யாதவர் காலற்ற வாறே. (ப. இ.) அறப்பகுதியாகிய சிவவழிபாடும், பொருட் பகுதியாகிய குடும்ப வாழ்க்கையும், இன்பப் பகுதியாகிய வேளாண்மையும், வீட்டுப் பகுதியாகிய திருவருள் நோக்கமும், பேறாகிய திருவடியும் இடையறாது ஆணும் பெண்ணும் எய்துமாறு குடிப்பிறப்பினர் நடந்து காட்டியும் நவின்று நாட்டியும் குடும்பத்தை வளர்ப்பர். அக் குறிப்புத் தோன்றவே உருவகமாகத் திருத்தி வளர்த்ததோர் தேமாங்கனி என்றனர். இதனால் பெறப்படுவது வாழ்க்கைத் துணையாம் கற்புறு மனைவியாகும். அக்கனியை வீட்டையும் குடும்பத்தையும் ஏட்டையும் காக்கும் வாட்டமில் கருவிப் பொருள் என்று எண்ணி வீட்டை விட்டு வெளியிற் போகாவாறு புதைத்த பொருள்போல் காவல் செய்து வைத்தனர். அத்தகைய பேதையார் காம மயக்கத்தால் பொருத்தமில்லாத புளியமரக் கொப்பிலேறிப் பயனும் எய்தாது கீழ் வீழ்ந்து காலொடிவர். இதன் குறிப்பு அழகிய தன் மனையாளைப் புறக்கணித்து அருவருக்கத்தக்க பிறன் மனையாளை விரும்பி அலைந்து இன்பமும் அடையாது துன்பம் எய்தி உயிர் துறப்பதாகும். கருத்தறியாதவர் என்பது 'ஈன்றாளுமாய் எனக்கு எந்தையுமாய் உடன் தோன்றினராய், மூன்றாய் உலகம் படைத்து உகந்தான்' திருவுள்ளக் கருத்தறியாதவர் என்பதாகும். சிவன் திருவுள்ளம் 'ஒப்புடைய மாதரும் ஒண்பொருளும் நீ' என்பதற்கிணங்கக் குடும்பப் பொருளைக் கடவுட்பொருளாகக் கருதித் துணையென உலகம் உணர்ந்து உய்ய வேண்டும் என்பது. அஃதாவது, மாதரும் பொருளும் பிறவும் சிவனருளால் தரப்பட்ட தவத்திற்குரிய துணைப்பொருள்கள் எனவும் அவற்றை யன்றிப் பிறவற்றைக் கவர நினைப்பது சிவபெருமானுக்குச் செய்யும் உய்தியில் குற்றமாம் பெரும்பாவம் எனவும் எண்ணி அன்பும் அச்சமும் கொண்டு இன்புற ஒழுகல் என்பதாம். காலற்றவாறென்பது இரட்டுற மொழிதலால் பிறன்மனை விழைந்தார் தம் காலொடியும் என்பதோடு குடும்பமும் பாழாய் வழியற்றுப் போம் என்பதாம். கால் - குடும்ப வழி. ஈன்றார்க் குறவுமுறை எம்மான் உடைமைஉயிர் சான்றாம்கொற் றற்குமகன் சார்ந்து. (அ. சி.) தேமா - மாமரம். புளிமா - புளியமரம். (2) 246. பொருள்கொண்ட கண்டனும் போதகை யாளும் இருள்கொண்ட மின்வெளி கொண்டுநின் றோரும் மருள்கொண்டு மாதர் மயலுறு வார்கள் மருள்கொண்ட சிந்தையை மாற்றகில் லாரே.1 (ப. இ.) அன்பும் அருளுமின்றி முறை கடந்து பொருள் அவாவினால் குடிகொன்று இறைகொள்ளும் கோமகனாகிய கண்டன் எனப்படும் மன்னனும் பிறன் மனைவிழைந்து அறந்திறம்பி மயலுற்று வாழ்
1. அறன்கடை. திருக்குறள், 142.
|