369
 

886. பொன்னான மந்திரம் புகலவும் ஒண்ணாது
பொன்னான மந்திரம் பொறிகிஞ்சு கத்தாகும்
பொன்னான மந்திரம் புகையுண்டு பூரிக்கிற்
பொன்னாகும் வல்லோர்க் குடம்புபொற் பாதமே.

(ப. இ.) பொன்போலும் சிறந்த திருவைந்தெழுத்து மந்திரத்தின் பெருமையினை அளவிட்டுக் கூறமுடியாது. அம் மந்திரத்தை இரண்டாம் பயிற்சி நிலையாகிய உதட்டளவில் கணித்தல் வேண்டும். அம் மந்திரத்தினை உயிர்ப்புப் பயிற்சியுடன் கணித்தால் உடம்பு பொன்வண்ணமாகும். அதன்கண் உறைத்து நிற்பார்க்கு அருள்விளக்கத்தால் அவர் உடல் அருளுடல் ஆகும்.

(அ. சி.) கிஞ்சுகம் - உதடு. புகை - சுவாசம்.

(23)

887. பொற்பாதங் காணலாம் புத்திரர் உண்டாகும்
பொற்பாதத் தாணையே செம்புபொன் னாயிடும்
பொற்பாதங் காணத் திருமேனி யாயிடும்
பொற்பாத நன்னடஞ் சிந்தனை சொல்லுமே.

(ப. இ.) சீலத்தொண்டால் திருவடிக்காட்சியும், நோன்புத் தொண்டால் திருமேனி தீண்டலும் உண்டாகும். திருவடியாணையால் செம்பு பொன்னாவதுபோல் மலமகன்று தூய்மையுறும். செறிவுத்தொண்டால் சிவனுருவெய்தும். அறிவுத் தொண்டால் திருவைந்தெழுத்தானாம் திருவருட்கூத்தின் நாட்டம் உண்டாகும். இவ் வுண்மையினைச் செவ்வி வாய்ந்தார்க்கு ஓதுங்கள். புத்திரர் - நோன்புத் தொண்டர்.

(அ. சி.) திருமேனியாயிடும் - சிவசாரூபம் கிட்டும்.

(24)

888. சொல்லு மொருகூட்டிற் புக்குச் சுகிக்கலாம்
நல்ல மடவார் நயந்துட னேவருஞ்
சொல்லினும் பாசச் சுடர்ப்பாம்பு நீங்கிடுஞ்
சொல்லுந் திருக்கூத்தின் சூக்குமந் தானே.1

(ப. இ.) திருவைந்தெழுத்துக் கணிக்கும் சிறப்பால் மற்றோர் உடம்பிற் புகுந்து அவ்வுடம்பின் சார்பால் துன்புறும் சிற்றுயிர்கட்குத் துன்பம் நீங்கி இன்புறும் வழியை ஆக்கலாம். திருவருள் துணையும் விருப்புடன் வந்து சொல்லிலும் செயலிலும் கைகூடும். குண்டலியானது நடுநாடியினைவிட்டு நீங்கும். இவையே ஐந்தெழுத்தருட்கூத்தின் அருமறையாகும். சூக்குமம் - அருமறை; இரகசியம். 'ஆறறி யந்தணர்க்கு அருமறை பலபகர்ந்து' (கலித்தொகை, கடவுள் வாழ்த்து) என்பதனால் இவ் வுண்மை யுணரலாம். இத்திருமூலர் திருவரலாறும் காண்க.2

(அ. சி.) ஒரு கூட்டில் புக்கு - இன்னொரு சரீரத்தில் புகுந்து. சுடர்ப்பாம்பு - குண்டலி.

(25)


1. ஊன நடன. திருவருட்பயன். 9. ஐந் - 1.

2. பாய்த்தியபின். 12. திருமூலர், 14.