(அ. சி.) முன்னை - படைப்புக் காலத்துக்கு முன். போதகத்தான் - போது அகத்தான்; உள்ளமாகிய தாமரை மலர்மீது உள்ளவன். (6) 7. தீயினும் வெய்யன் புனலினுந் தண்ணியன் ஆயினும் ஈசன் அருளறி வார்இல்லை சேயினும் நல்லன் அணியன்நல அன்பர்க்குத் தாயினும் நல்லன் தாழ்சடை யோனே. (ப. இ.) தீயைக் காட்டிலும் மிகவும் வெப்பம் உள்ளவன். இந்நிலை அறிவாய்த் தனியாய் நிற்கும் கழி நிலை. புனலைவிடக் குளிர்ந்தவன். இந்நிலை அருளுடன் கூடி அனைத்துயிரையும் இயக்கியாளும் வழிநிலை. ஆயினும் அவன்தன் அருள் நிலையினை உள்ளவாறு அறிவார் ஒருவரும் இலர். சுட்டுணர்வாலும் சிற்றுணர்வாலும் அறியப்படாத சேய்மையனாயினும் நல்லன்பர்களுக்கு அணியனாய் நின்று என்றும் நன்மை செய்பவன். பால் நினைந்தூட்டும் தாயினும் இனியன். தாழ்ந்த திருச்சடையை உடையவன். கழிநிலை - கடந்த நிலை. (அ. சி.) சேயினும் - மனமாதிகளுக்கு எட்டாதவன் ஆயினும். அணியன் - அணுவாகிய உயிருடன் கலந்துள்ளவன். (7) 8. பொன்னாற் புரிந்திட்ட பொற்சடை யென்னப் பின்னாற் பிறங்க இருந்தவன் பேர்நந்தி என்னால் தொழப்படும் எம்இறை மற்றவன் தன்னால் தொழப்படு வாரில்லை தானே.1 (ப. இ.) பொன்னால் பின்னி அழகுற அமைக்கப்பட்ட திருச்சடையென்று வழுத்தும்படியாகப் பின்னால் விளங்கும் சடையுடன் வீற்றிருந்தருள்பவன். அவன் திருப்பேர் நந்தியங் கடவுள் என்று சொல்லப்படும். அடியேனால் தொழப்படும் எம் தலைவன். அத்தகைய சிவன் யாரையும் தொழுவானல்லன். எல்லாரும் அவனையே தொழுவர். அதனால் தன்னால் தொழப்படுவார் இல்லை யென்றருளினர். இதுபற்றியே 'சேர்ந்தறியாக் கையானை' என்னும் செந்தமிழ்ச் சிறப்புத் திருமறை முடிவும் (திருவாசகம்) அருளிற்றென்க. (அ. சி.) நந்தி - நந்துதல் இல்லாதவன். பிறப்பு, இறப்பு இல்லாதவன். பொன்...இருந்தவன் - அருளாகிய கதிர்களால் சூழப்பட்டவன். (அக் கதிர்கள் ஒன்றோடொன்று பிணைந்திருப்பது சடை போன்ற காட்சியை அளிக்கின்றது.) (8) 9. அயலும் புடையும்எம் ஆதியை நோக்கில் இயலும் பெருந்தெய்வம் யாதுமொன் றில்லை முயலும் முயலில் முடிவுமற் றாங்கே பெயலும் மழைமுகிற் பேர்நந்தி தானே.
1. முழுத்தழல். அப்பர், 4. 113 - 5. " கையார். 8. திருவம்மானை, 13.
|