545
 

3. மார்க்க சைவம்
(மெய்யுணர்வுச் செந்நெறி)

1402. பொன்னாற் சிவசாத னம்பூதி சாதனம்
நன்மார்க்க சாதனம் மாஞான சாதனந்
துன்மார்க்க சாதனந் தோன்றாத சாதனஞ்
சன்மார்க்க சாதன மாஞ்சுத்த சைவர்க்கே.1

(ப. இ.) செம்பொன் அனைய சீலம் நோன்பு செறிவு அறிவு என்னும் நால்வகை நன்நெறியும், திருநீற்றுத்துணையும், ஆகிய இவை நன்னெறியாகிய சித்தாந்தச் செந்நெறி. பிறப்பு இறப்பிற் புகுத்தும் புன்னெறிக்கண் என்றும் பொருந்தாத மனக்கோளும் நன்னெறியின் வழித்துணையாகும். மேற்கூறியனவாகிய செந்நெறி நிற்பாரே உண்மைச் சைவர் என்று அழைக்கப்பெறுவர். சுத்தம் - உண்மை; இயற்கை.

(அ. சி.) பொன்னாற் சிவசாதனம் - பொன்கட்டிய உருத்திராக்க மாலை. நன்மார்க்க சாதனம் - சரியை, கிரியை, யோகம், ஞானம். துன்...சாதனம் - இவை சன்மார்க்கத்திற்கு அடைமொழிகள்.

(1)

1403. கேடறு ஞானி கிளர்ஞான பூபதி
பாடறு வேதாந்த சித்தாந்த பாகத்தின்
ஊடுறு ஞானோ தயனுண்மை முத்தியோன்
பாடுறு சுத்தசை வப்பத்த நித்தனே.

(ப. இ.) மலம் அற்ற திருவடியுணர்வுசேர் ஞானி மெய்யுணர்வுச் சிறப்பினனாவன். அவனே குற்றமற்ற மறையும் முறையும் எனப்படும் வேதாந்த சித்தாந்தப் பகுதியிலுள்ள சிவசிவ என்னும் உயிர்போல் ஊடுறும் மெய்யுணர்வு கைவந்த தவத்தோனாவன். அவனே அவாவென்னும் பசையற்றோனாகிய உயிர்வாழ் உண்மை வீடுபேற்றினனாவன். அவனே பெருமைமிக்க உண்மைச் சைவக்கோட்பாட்டினனாவன். அவனே என்றும் நிலைபெற்றோனாவன். அவனே மெய்யுணர்வுச் செந்நெறியினனாவன்.

(அ. சி.) பாடு - குற்றம். வேதாந்த சித்தாந்தபாகம் வேதங்களின் முடியை ஒத்த சித்தாந்தப் பகுதி. தமிழ்ச் சிவஞான போதமே சித்தாந்த சாத்திரங்களில் முதன்மை பெற்றது. ஆகமங்களின் சாரமாயுள்ளது. அறம், பொருள், இன்பம், வீடு என்னும் தமிழ் நான்மறைகளின் முடிபை ஒத்தது. வடமொழி வேதங்களுக்கு ஆகமங்கள் உடன்பாடு இல்லை. அவ் வேதங்களில் அறம், பொருள், இன்பம், வீடு என்னும் பாகுபாடுகளும் இல்லை. இதனை வலியுறுத்தவே 'வேதாந்த சித்தாந்த பாகம்' என்றார் நாயனார். பாடு - பெருமை.

(2)


1. உரைதளர்ந். அப்பர், 5. 43 - 5.