1959. பொய்யிலன் மெய்யன் புவனா பதியெந்தை மையிருள் நீக்கு மதியங்கி ஞாயிறு செய்யிருள் நீக்குந் திருவுடை நந்தியென் கையிருள் நீங்கக் கலந்தெழுந் தானே.1 (ப. இ.) இருநூற்று இருபத்து நான்கு என எண் குறிப்பிடப்பட்டுள்ள புவனங்கட்கும் முதல்வன் சிவபெருமான். அவனே எந்தையுமாவன். அவன் பாழ்ங்கோளர் முதலாயினார் கூறுவதுபோன்று இல்லாதவனல்லன். உண்மையாக யாண்டும் உள்ளவன். புறத்தே மூடியுள்ள மாயிருளாகிய மையிருளை நீக்குவது திங்கள் தீ ஞாயிறு என்னும் மூன்றுமேயாம். இருள்சேர் இருவினையாம் செய்வினை இருளைப் போக்கியருள்பவன் புந்திவட்டத்துப் புகுந்து நின்றருளும் நந்தியெங்கடவுள். அவனே ஒட்டுமலமாகிய அறிவைத் தடைப்படுத்தும் ஒட்டிருளையொடுக்க என்னுள் உயிர்க்கு உயிராய் எழுந்தருளியிருந்தனன். அவன் பொய்யிலன் மெய்யன். ஒட்டிருள்: ஆருயிரின்பால் குற்ற இயல்பாய் ஒட்டியுள்ள தொன்மலம். என்கையிருள் - என்னிடத்துப் பண்டேயுள்ள இருள். கை - இடம். பாழ்ங்கோளர்: மெய்ப்பொருளாகிய கடவுளில் லென்போர். இவரை நாத்திகரென்ப. (அ. சி.) புவனாபதி - புவனங்களை உண்டாக்கினவன். மெய்யிருள் - உலக இருள். செய்யிருள் - கன்மம். என் கை இருள் - என்னிடத்து உள்ள இருள். (22) 1960. தனிச்சுட ரெற்றித் தயங்கிருள் நீங்க அனித்திடு மேலை யருங்கனி யூறல் கனிச்சுட ராய்நின்ற கயிலையில் ஈசன் நனிச்சுடர் மேல்கொண்ட வண்ணமு மாமே. (ப. இ.) ஒப்பில்லாத சிவபெருமான் தனிச்சுடராவன். அவன் நிறைந்த இருள் நீங்க ஒளிவீசி அருள்செய்வன். அளித்திடும் என்பது எதுகைநோக்கி அளித்திடும் என நின்றது. அவனே திங்கள் அமிழ்தமாகிய அருங்கனி ஊறலை அளித்தருள்வன். அவனே முதிர்ந்த பேரொளிப் பிழம்பாயுள்ளவன். அவனே திருக்கயிலையில் வீற்றிருந்தருளும் சீர்சால் ஆண்டவன். அவனே எல்லா ஒளிக்கும் ஒளியருளித்தான் மேலாகத் திகழும் தனிச்சுடர் வண்ணமுமாவன். (அ. சி.) எற்றி - வீசி. அளித்திடும் - உதவிசெய்யும். அருங்கனி ஊறல் - மதி அமுதம். கனிச்சுடராய் - கனிந்த அருள் ஒளியாய். அளிச்சுடர் அருள்ஒளி வீச்சு. (23) 1961. நேரறி வாக நிரம்பிய பேரொளி போரறி யாது புவனங்கள் போய்வருந் தேரறி யாத திசையொளி யாயிடும் ஆரறி வாரிது நாயக மாகுமே.
1. பெருகு. 12. இளையான்குடிமாறர், 15. " அந்திவட். அப்பர், 4. 99-1.
|