886
 

வருமாறு : இருட்புலம்பு, மருட்புலம்பு, தெருட்புலம்பு, அருட்புலம்பு என்பன. இவற்றின் விளக்கத்தைத் துகளறு போத முதலிய நூற்களுட் காண்க. ஆராயுமிடத்து இவையனைத்தும் புலம்புநிலையேயாகும். மாயையைச் சேர்ந்தபின்னரே ஆருயிர்க்கு உவப்பாகிய விழைவு விளக்க முறும். விளக்கமுறவே சாரியலாகிய அம் மாயை தாமே அகலும். அகலவே சிவபெருமான் தன் திருவருட் பெருங்கடலை ஆருயிர்க்குச் செவ்வி நோக்கி நிறைவித்து மலமறுத்தருளினன். உவப்பு - இச்சை; அராகம். செவ்வி - பருவம்.

(அ. சி.) மூவகை நால்வகை - கேவல அவத்தை மூன்றே அன்றி நான்கு வகைகளும் உண்டு.

(9)

2196. பொய்யான போதாந்தம் ஆறாறும் விட்டகன்று
எய்யாமை நீங்கவே எய்தவன் தானாகி
மெய்யாஞ் சராசர மாய்வெளி தன்னுட்புக்கு
எய்தாம லெய்துஞ்சுத் தாவத்தை 1யென்பதே.

(ப. இ.) நிலைபேறில்லாத மண்முதல் அறிவின் முதல்துணையாகிய ஒலிமெய் ஈறாகக் கூறப்பட்ட முப்பத்தாறு மெய்களும் அருளால் உண்மையுணர்ந்து கருத்தினில் விட்டகலுதல் வேண்டும். அகலவே இவரியலாகிய ஆணவ விளைவாம் அறியாமை நீங்கும். நீங்கவே அவ் வுயிர் சிவபெருமான் திருவடியினை எய்தத் தகுதியாகும். அப்பொழுது இயங்குதிணையுயிர் நிலைத்திணைஉயிர் உலகம் எல்லாவற்றுடனும் கலப்பால் பிரிப்பின்றி ஒன்றாய் நிற்கும் சிவன் தன்னுள் அவ் வுயிர் புகுமாறு அருள்வெளியினை அறிவித்தருள்வன். அந் நிலையினை ஆருயிர்கள் தம்முனைப்பற்றமையால் எவ்வாறு எய்தினோம் என்று அறிய வாராதவாறு எளிதாக எய்தும். இதுவே புரிவாகிய தூயநிலை யென்ப. தூயநிலை - சுத்தாவத்தை.

(அ. சி.) எய்யாமை - அறியாமை. எய்தவன் - முயற்சித்தவன். வெள் - சிவ ஆகாயம்.

(10)

2197. அனாதி பசுவியாத்தி யாகு மிவனை
அனாதியில் வந்த மலம்ஐந்தால் ஆட்டி
அனாதியிற் கேவல மச்சக லத்திட்டு
அனாதி பிறப்பறச் சுத்தத்து ளாமே.

(ப. இ.) தொன்மைக்கண் ஆருயிர் இவர்நிலையாம் ஆணவப் பிணிப்பால் அவ் வாணவச் செறிவினுள் அடங்கிக் கிடந்தன. இவர்நிலை - செறிவுநிலை. அடங்கிக்கிடப்பது - வியாத்தி. அத்தகைய ஆருயிரைத் தொன்று தொட்டுப் பிணித்துள்ள ஐவகை மலங்களாற் சிவபெருமான் ஆட்டிவைக்கின்றனன். அவ் வாட்டுதலின் பொருட்டு அவ் வுயிரைப் புலம்பு நிலையினின்றும் புணர்வு நிலையிற் புகுத்தருளுகின்றனன். அவ் வுயிர் சிவபெருமானின் திருக்குறிப்பின்வழி ஒழுகின் அந் நன்மையின் தன்மையால், தொன்மைப் பிறப்பறும். அறவே அவ் வுயிர் தூய நிலையினை எய்தும். தொன்மை - அனாதி.


1. மண்முதற். உண்மை நெறிவிளக்கம், 1.