988
 

மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி, வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி, வெளியிடை ஒன்றாய் விளைந்தாய் போற்றி' என்னும் மறை முடிவின்படி சிவபெருமான் நின்றருள்கின்றனன். அதனால் இவ்வைம் பூதங்களும் இயங்குமாறு அங்கு நின்றருள்வது பேரிரக்கமாய அளிசேர் தற்பரங்காண் என்றருளினர். அவன் இவ்வைந்தினிடமாகத் தன்னை விட்டுநீங்காத மரமும் காழ்ப்பும் போன்ற திருவாணை வழியாகவே நிறைந்தருளுகின்றனன். அவ்வாணையே பேரறிவுப் பெருவெளியாகிய சத்தியென்று பெரியோரால் சொல்லப்படும். அத் திருவாணையே சிவபெருமானுக்குத் திருமேனியாகும்.

(அ. சி.) நின்ற - நிலைபெற்றிருக்கின்ற, வெளியாய சத்தி - பரமாகாய சத்தி. அவன் வடிவாம் - அந்தப் பரனுடைய வடிவாம்.

(13)

2426. மேருவி னோடே விரிகதிர் மண்டலம்
ஆர நினையும் அருந்தவ யோகிக்குச்
சீரார் தவஞ்செய்யிற் சிவனருள் தானாகும்
பேரவும் வேண்டாம் பிறிதில்லை தானன்றே.

(ப. இ .) நிலையிற் றிரியாது பொன்வண்ணமாக என்றும் ஒன்று போல் பொன்றாது நின்றருளும் சிவனை மேருவென்பர் செந்தமிழர். அத்தகைய மேருவாகிய சிவபெருமானை விரிந்த கதிர்களையுடைய பகலவன் மண்டிலமாகிய நெஞ்சத்தினிடத்து வஞ்சனையின்றி எஞ்சாது நினைக்கின்ற அருந்தவயோகியர்க்கு அந்நினைப்பாகிய சிறந்த தவத்தை அவர் செய்யின் ஆண்டுச் சிவனருள் வெளிப்பட்டுத் தானாகநிற்கும். நீங்க வேண்டிய நீர்மையும் இல்லை. அச் சிவபெருமானின் திருவாணையாகிய திருவருளின் மிக்கது பிறிதொன்றில்லை.

(அ. சி.) மேரு-பரசிவம்.

(14)

12. முத் துரியம்

2427. நனவாதி மூன்றினிற் சீவ துரியந்
தனதாதி மூன்றினிற் பரதுரி யந்தான்
நனவாதி மூன்றி னிற்சிவ துரியமா
மினதாகுந் தொந்தத் தசிபதத் தீடே.

(ப. இ.) செயலறலாகிய துரியத்தின்கண் நனவு கனவு உறக்கம் என்னும் மூன்றும் உண்டு. இவை, ஆருயிர்த் துரியமாகும். தனதாதி என்பது தானே எல்லாவற்றிற்கும் வினைமுதற்காரணமாக விளங்கும் சிவபெருமான்பாலும் சார்ந்தவர்பொருட்டு கனவு முதலிய மூன்றும் உள்ளன. அவை சிவதுரியம் எனப்படும். திருவருளெனப்படும் பரையின் கண்ணும் இத்தகைய மூன்றும் நிலைபெறும். இதுவும் சார்ந்தவர் பொருட்டேயாம். இவை ஆருயிர்த் துரியம், திருவருட்டுரியம், சிவத்துரியம் என மூவகைத்து. இவை பேருயிரின் இனமாகும் ஆருயிரும் சிவனுடன் மேவும் இந்நிலை தொம்பதத்துடன் அசிபதம் கூடிய கூட்டத்தால் பெறப்படும் அஃதாவது நீ அதுவாகிறாய் என்பதே.