(ப. இ.) யாண்டும் ஒரு பெற்றித்தாய் விளங்கும் ஒளியாய் நிற்பவன் சிவன். அவன்றன் தண்ணளிசேர் திருச்செயல் ஒருபடித்தாயன்றிப் பலபடித்தாய் நிகழ்வன. அதனால் அவன் விகிர்தனென்று அழைக்கப்படுகின்றான். அவன் எழுந்தருளி விளக்கமிக்க ஒளியாக நிற்கும்போது தொன்றுதொட்டே தங்கியுள்ள இருண்மலம் மாயாகாரியப் பாசத்துள் மயக்காது. ஆணவ வல்லிருள் அகலுதற் பொருட்டுச் சிவபெருமான் ஐந்தொழிற்றிருக்கூத்து அம்மை காணச் செம்மையுடன் என்றும் நிகழ்த்துகின்றனன். அச் சிவபெருமான் விளங்கொளியாக உன்மனத்துள் ஒன்றி நின்றருள்கின்றனன். (அ. சி.) இருள் சேரா - ஆணவம் முனைத்து நில்லாமல். கள . . . . . லாட - ஆணவ இருள் இரியக் கூத்தப்பிரான் ஆட. உன்மனத்து - உன்மனாகலையில். (11) 2643. போது கருங்குழற் போனவர் தூதிடை ஆதி பரத்தை அமரர் பிரானொடுஞ் சோதியும் அண்டத்தப் பாலுற்ற தூவொளி நீதியி னல்லிருள் நீக்கிய 1வாறன்றே. (ப. இ.) பேரரும்பு சூடிய கரிய கூந்தலையுடைய திருவருளம்மையுடன் நிறைந்து நிற்பவர் சிவபெருமானார். அத் திருவருளம்மை ஆருயிர்களை வனப்பாற்றலாக நின்று ஆதி பரத்து ஐயுடன் கூட்டுவிப்பள். ஆதிபரத்து ஐ என்பது அனைத்துக்கும் காரணமாய் அனைத்தையும் கடந்த விழுப்பொருளாய் நீக்கமற நிறைந்து நிற்கும் முதல்வன். அவன் வானவர் கோன் தீ பல்வேறு அண்டங்கள் அனைத்துக்கும் அப்பால் நிற்கும் தூய அறிவொளியாக வுள்ளவன். அவனே முறைமாறாது ஆருயிர்களின் செவ்வி நோக்கி அவ்வவ் வுயிர்களின் ஆணவ வல்லிருளை அகற்றியருள்வன். ஐ - முதல்வன். (அ. சி.) போது.......போனவர்-மாதொரு பாகனார். தூதிடையாதி - சந்து செய்விப்பதில். பரத்துஐ - மேலான கடவுள். அமரர்பிரான் - இந்திரன். நல்லிருள் - ஆணவ இருள். (12) 2644. உண்டில்லை யென்னும் உலகத் தியல்வது பண்டில்லை யென்னும் பரங்கதி யுண்டுகொல் கண்டில்லை மானிடர் கண்ட கருத்துறில் விண்டில்லை யுள்ளே விளக்கொளி 2யாகுமே. (ப. இ.) சுட்டியுணரப்படும் இவ் வுலகம் உண்டு என ஒருசாரார் கூறுகின்றனர். அதனை மறுத்து மற்றொருசாரார் உலகம் கானல்நீர் போல் இல்லாதது எனக் கூறுகின்றனர். இத்தகைய வுலகத்துள் இருண் மலத்துடன் கூடிய புலம்பு நிலையில் ஆருயிர்கள் புலம்பு நிலையும் புணர்வு நிலையும் கடந்த புரிவு நிலையாகிய திருவடிப் பேறு இல்லை
1. ஐயன்காண். அப்பர், 9. 24 - 8. " பொய். " 5. 48 - 9. " என்ஐமுன். திருக்குறள், 771. 2. துன்றும் திருவருட்பயன், 21.
|