1211
 

(ப. இ.) நெறி நூலும் துறைநூலுமாகிய செந்தமிழ் வேதாகமங்களும், அந் நூல்கள் ஓதியும் ஓதுவித்தும் வரும் ஒண்மைக் குருமாரும், நுண்ணுணர்வாகிய தன் நுகர்வும் ஆகியவற்றைப் புட்கள் என்று ஓதினர். அப்புட்கள் அறியாமையாகிய இருள் அருளால் கெட்டதென்று ஒலித்தன. அங்ஙனம் ஒலித்துக்கொண்டிருப்பவும் அதனை உறுதி என்றுணர்ந்து அவ்வழியொழுகாது பலர் பொழுதுவிடிந்தது என்று வந்து கண்டுங், கேட்டும், கொண்டும், கூடியும், 'உண்டும், உறங்கியும் இன்புறலாமென்று பூங்கொடியாகிய மாயாகாரியப் பொருள்களையும், இணைவிழைச்சையும் நாடியலைகின்றனர். இணைவிழைச்சை விடாது பற்றி ஒருவுவதின்றி மருவுகின்றனர். நல்லாரிணக்கமில்லாத அல்லார் நிலை புலம்புநிலையேயாகும். புலம்புநிலை - இருள்நிலை. அஃதாவது அறியாமை நிலையுடன் ஐம்புலனுகர்வுச் சிறப்பாகிய பெண்களுடன் கூடும் கூட்டத்தையே பெரிதென்று நாடிப்போக நுகர்கின்றனர். அப்போகம் சிவபோகமாக வேண்டுமென்பது நல்லோர் குறிக்கோள். அஃதாவது சிவனடியை மறவா நினைவுடன் ஆண்டான் அடிமைமுறை பூண்டு நுகர்தல். அங்ஙனமின்றித் தன் முனைப்புடன் இறையை மறந்து எந் நுகர்வு நுகரினும் அது பிறவிக்கு வித்தாம். அறமுறை திறம்பிய பாவமுமாகும். அறக்கூழ்ச் சாலையில் அமைக்கப்பட்ட உணவினை அவர்கள் அருளுடன் வாக்க உண்பார் நன்றிமறவா நினைவும் அன்புங் கொண்டு உண்ணின் அஃது அறமாகும். அங்ஙனமின்றி நன்றி மறத்தலும் கட்டுண்டலும் செய்வரேல் அது பாவமாகும். இவையே மேலனவற்றிற்கு ஒப்பாவன கட்டுண்டல் - களவுசெய் துண்டல். அறியாமை வயப்பட்ட ஆருயிர்க்கிழவன் புலம்பனெனப்படும். அத்தகைய புலம்பனுக்கு எந்தநாளிலும் அறியாமையாகிய அகவிருள் விடிந்த தில்லை என்க. ஆருயிர்க்கிழவன்: ஆன்மா.

(அ. சி.) புலர்ந்தது போது - அஞ்ஞான இருள் கெட்டது புட்கள் - அனுபவங்கள். பூங்கொடி - பெண்.

(68)

2894. போதிரண் டோதிப் புரிந்தருள் செய்திட்டு
மாதிரண் டாகி மகிழ்ந்துட னேநிற்குந்
தாதிரண் டாகிய தண்ணம் பறவைகள்
வேதிரண் டாகி வெறிக்கின்ற 1வாறன்றே.

(ப. இ.) காலை மாலை என்று சொல்லப்படும் இருவேளைகளிலும் நெறிநூல் துறைநூல்களாகிய வேதாகமங்களை முறையுற ஓதுதல் வேண்டும். அங்ஙனம் ஓதவே அகம் புறமாகிய இரண்டிடத்தும் திருமகள், ஒத்துத் துணைசெய்தருள்புரிவள்; மகிழந்துடனாகி நிற்பள். தாதாகிய வெண்ணீர் செந்நீர் என்னும இரண்டன் கலப்பால் கருவுட்புகுந்து ஆருயிர் பிறக்கும். அவ் வுயிர்களைப் பறவைகள் என்று உருவகித்தனர். 'இலக்கம் உடம்பு இடும்பைக்கு' ஆதலின் உடம்பினை வேதென்றனர். அஃது ஆண் பெண் என இரண்டென்றனர். வேது - துன்பம். அவ் வுடலைக்கண்டு அவ் வுயிர் செய்வதறியாது நடுங்குகின்றது.

(அ. சி.) மாது - இலக்குமி. தாது இரண்டு - சுக்கில சுரோணிதம். பறவைகள் - சீவர்கள். வேதிரண்டு - ஆண் பெண் சரீரங்கள்.

(69)


1. இலக்கம். திருக்குறள், 627.

" வேண்டேன்புகழ். 8. உயிருண்ணிப்பத்து, 7.