சிவனே. அனைத்துயிர்களாலும் அன்பினால் ஓதப்படும் ஒண்பொருளும் அவனே. நான்முகன் நிலையினைத் தந்தருள்பவனும் அவனே. ஆருயிர்களை அறவழியில் நடத்தும் ஆரணமாகிய மறையாய் விளங்குபவனும் அவனே. உலகமே உருவமாகக் கொண்டு திகழ்பவனும் சிவபெருமானே. ஆரணம்: ஆர் + அரணம் = ஆராணம்; ஆரணம் எனமரீஇற்று; ஒழுக்கக் காவலாயுள்ளது. உடல்நடு - நெஞ்சம். பாரணன் - வழுத்தப்படுவோனாகிய சிவன். பதஞ்செய்வன் - நிலையை அளிப்பன். ஆரணம் - சொல்லுலகு. (11) 379. பயன்எளி தாம்பரு மாமணி செய்ய நயன்எளி தாகிய நம்பன்ஒன் றுண்டு அயன்ஒளி யாயிருந் தங்கே படைக்கும் பயனெளி தாம்வய ணந்தெளிந் தேனே. (ப. இ.) செம்மையாகிய திருவடியின்பத்தினை எளிதாக அளித்தருளும் நம்பன் சிவபெருமான். அவனே மெய்யன்பர்கட்கு எல்லாப் பயனையும் யாண்டும் எளிதாகத் தந்தருளுவன். அதனால், விலைவரம்பில்லாப் பெரிய சிறந்த செம்மணியாக வுள்ளவனும் அவன் ஒருவனே. அயனுடைய அறிவிற்கு அறிவாய்க் கலந்து நின்று படைப்புத் தொழிலை நடப்பித்தருள்பவனும் அவனே. இவ்வாறாக எல்லாப் பயனையும் எளிதில் ஈந்தருளுவதற்குக் காரணம் சிவபெருமானின் பேரருளுடைமையே எனத் தெளிந்தேன். சிவபெருமான் ஆருயிர்களுள் சிலவற்றைத் தகுதியுடையனவாக ஆக்கி, அவற்றைக்கொண்டு ஏனை உயிர்களுக்கு வேண்டும் துணைபுரிவிக்கின்றனன். இம்முறைதான் அவன் உன்முகமாய் நின்று செய்தருள்வதாகும். செம்மணி - மாணிக்கம். நயன் - இன்பம். ஒளி - சிவஞானம். வயணம் - காரணம். (அ .சி.) வயணம் - காரணம். (12) 380. போக்கும் வரவும்1 புனிதன் அருள்புரிந் தாக்கமுஞ் சிந்தைய தாகின்ற காலத்து மேக்கு மிகநின்ற எட்டுத் திசையொடுந் தாக்குங் கலக்குந் தயாபரன் தானே. (ப. இ.) அனைத்தையும் ஒடுக்கும் அரனே முழுமுதலாகலின் போக்காகிய பேரொடுக்கத்தைச் செய்பவனும் சிவபெருமான். ஆண்டவன் அருளால் மீண்டும் உலகுள ஆதலின் வரவாகிய உலகப் புதுப்படைப்பினைச் செய்தருள்பவனும் அவனே. அவ்வுயிர் உலகங்கட்கு ஆக்கமாகிய காத்தலைச் செய்தருள்பவனும் சிவனே. இவையனைத்தும் சிந்தையாகிய திருவுள்ளக் குறிப்பான் நிகழ்வன. அக் காலத்துச் சிறப்பு மிகும்படியாக நின்ற எட்டுத் திசையொடும் சிவபெருமான் வேறறக் கலந்து நின்றும் தொடக்குறான். அவன் அங்ஙனம் கலந்து நிற்பதற்குக் காரணம் அவனது எல்லையில்லாத பேரருளாகிய தயா என்க. போக்கு - அந்தம்; பேரொடுக்கம். வரவு - ஆதி; மீண்டுலகப் படைப்பு. ஆக்கம் - காப்பு. மேக்கு - உயர்வு; சிறப்பு. (13)
1. அவையே சிவஞானபோதம், 2.
|