கூற்றிலே பொருத்தவல்லாள். அவளே அளவிறந்த அண்டகோடிகளைத் திருவுள்ளத்தால் படைக்கவும் வல்லள். அவ்வம் மண்டலத்துள்ள ஒளிகொடுக்கும் பொருள்களுக்கும் ஒளியருளவல்லாளும் அவளே. எல்லாவற்றையும் அழகுபடுத்தி நிலைப்பிக்க வல்லாளுமாவாள். அவள் திருவடிகளையும் போற்றி வணங்குவேன். (அ. சி.) வனைய - ஆக்க. புனைய - அலங்கரிக்க. (25) 1126 .போற்றியென் பேன்புவ னாபதி அம்மையென் ஆற்றலுள் நிற்கும் அருந்தவப் பெண்பிள்ளை சீற்றங் கடிந்த திருநுதற் சேயிழை கூற்றந் துரக்கின்ற கோள்பைந் தொடியே. (ப. இ.) எல்லாப் புவனங்கட்கும் முதல்வியாக விளங்குகின்ற அருளம்மையைப் போற்றுகின்றேன். அவள் ஆருயிர்களின் அன்பறிவாற்றல்களுள் அவற்றை இயைந்தியக்க இடையறாது நிற்கின்றனள். அதனால் அருந்தவப் பெண்பிள்ளை என்று வழங்கப்பெறுவள். சினமகன்ற அகற்றிய அழகிய நெற்றியை உடைய அம்மை. கூற்றத்தை மாற்றும் முடிவிலாற்றல் அமைந்த வடிவினள். (அ. சி.) ஆற்றல் - அறிவு ஆற்றல். கூற்....கோள் - கூற்றுவனைத் துரத்துகின்ற வல்லமையுள்ள. (26) 1127 .தொடியார் தடக்கைச் சுகோதய சுந்தரி வடிவார் திரிபுரை யாமங்கை கங்கைச் செடியார் வினைகெடச் சேர்வரை என்றென்று அடியார் வினைகெடுத் தாதியு மாமே. (ப. இ.) அழகிய வளையலணிந்த திருக்கையையுடையாள் திருவருளம்மை. அவளே இன்ப வூற்றாந்திருவினள். அழகிய திரிபுரை; மங்கை; சலமகள்; அவளே திருடி சேர்வார் துன்பவினைகளை எல்லாம் அகற்றியருள்பவள். ஞாயிற்றுக்கும் ஒளிகொடுப்பவளும் அவளே. அவள் அடியார்வினைகளை அறக்கெடுத்து அவர்களைத் திருவடியுணர்வில் என்றென்றும் நிலைக்கச் செய்யும் நடப்பாற்றலாகிய ஆதியாவள். (அ. சி.) செடி - துன்பம். என்று என்று - சூரியன் என்று. (27) 1128 .மெல்லிசை1ப் பாவை வியோமத்தின் மென்கொடி பல்லிசைப் பாவை பயன்தரு பைங்கொடி புல்லிசைப் பாவையைப் போகத் துரந்திட்டு வல்லிசைப் பாவை மனம்புகுந் தாளே. (ப. இ.) இயல்பாகவே பண்ணும் தோற்கும் மென்மையும் இனிமையும் வாய்ந்த திருமொழியினை உடையவள், அருள்வெளியில் விளங்கும் மெல்லிய பூங்கொடி; பல உயிர்களோடும் இயல்பாகவே இயைந்து
1. இன்சொல். திருக்குறள், 9.
|