நுண்ணுணர்வினாரே அறிவர். ஏனையார் அறியார். அம்மை ஆற்றலாகவும் அப்பன் பொருளாகவும் திகழ்வர். ஆதலால் எப்பொருளை எடுத்துக் கொண்டாலும் ஆற்றலும் ஆற்றலின் நிைலைக்களமுமாக ஒவ்வொன்றும்இருதிறப்படும். இது கதிரும் கதிரவனும் போன்ற நிலையாகும். எங்கும் நிறைந்து நீக்கமற நிற்கின்ற சிவனும் சத்தியும் எல்லாப் பொருளையும் இயைந்தியக்குகின்றமையான் எல்லாம் சிவனெனப்படும் சத்தி சத்தன் என்பதை ஆற்றல் ஆற்றலி எனவும் கூறுவர். (அ. சி.) இலிங்கம் - குறி. உலகமும் சரம் அசரங்களும் எல்லாம் சிவ வடிவம் என்பது. (1) 1684. உலகில் எடுத்தது சத்தி முதலா உலகில் எடுத்தது சத்தி வடிவாய் உலகில் எடுத்தது சத்தி குணமாய்1 உலகம் எடுத்த சதாசிவன் தானே. (ப. இ.) சதாசிவனாகிய முழுமுதல் தன்னைவிட்டு நீங்கா ஆணையாகிய சத்தியே வினைமுதற் காரணமாகக்கொண்டு உலகினைக் கருத்தளவானே படைத்தருள்கின்றனன். அதனால் சத்தியே உலகின் காரணம், உலகின் வடிவம், உலகின் குணம் என ஏற்றிக் கூறுவர். ஏற்றுரை - புனைவு. கருத்து : திருவுள்ளக்குறிப்பு. (அ. சி.) சத்தி முதலா - சத்தியை முதற்காரணமாக் கொண்டு. (2) 1685. போகமும் முத்தியும் புத்தியுஞ் சித்தியும் ஆகமும் ஆறாறு தத்துவத் தப்பாலாம் ஏகமும் நல்கி யிருக்குஞ் சதாசிவம் ஆகம வத்துவா வாறுஞ் சிவமே. (ப. இ.) அன்பியல் வாழ்க்கையாகிய போகமும், அருளியல் வாழ்க்கையாகிய முத்தியும், முறையே அவற்றின் பயனாகிய சிற்றின்பமாகிய புத்தியும், பேரின்பமாகிய சித்தியும், சித்திக்குரிய வழிவகை கூறும் திருமூலர் போன்ற செந்தமிழாகமும், அவற்றின்கண் காணப்படும் அருஞ்சைவர் தத்துவம் முப்பத்தாறும், அதற்கு அப்பாலாகத் திகழும் ஒப்பில் ஒருமுதலாம் சதாசிவமும். ஆகமநூலிற் காணப்படும் அத்துவாவாகிய வழிகள் ஆறும் சிவபெருமானேயாம். சிவபெருமானே யாம் என்பதற்குப் பொருள் அவன்றன் ஆணையால் நிகழ்வன என்பதாம். (அ. சி.) ஏகம் - ஆன்மா. ஆகம - ஆகமங்கள் கூறுகின்ற. (3) 1686. ஏத்தினர் எண்ணிலி தேவரெம் ஈசனை வாழ்த்தினர் வாசப் பசுந்தென்றல் வள்ளலென்று ஆர்த்தனர் அண்டங் கடந்தப் புறநின்று காத்தனன் என்னுங் கருத்தறி யாரே.
1. சத்தியும், சிவஞானசித்தியார், 1. 3 - 10.
|