1692. அதுவுணர்ந் தோனொரு தன்மையை நாடி எதுவுண ராவகை நின்றனன் ஈசன் புதுவுணர் வான புவனங்கள் எட்டும் இதவுணர்ந் தென்னுடல் கோயில்கொண் டானே. (ப. இ.) திருவருள் உணர்வால் சிவனை உணர்ந்தோன் ஆருயிரும் சிவனும் புணர்ப்பினால் ஒருதன்மையவாக நிற்கும் நிலைமையினை நாடி, எவ்வகையாலும் உணரவொண்ணாதபடி நின்றவன் சிவன் என்று தெளிவன் தெளியவே சிவனது முற்றுணர்வாகிய திருவடியுணர்வு யான் எனதென்னும் செருக்காகிய தன்முனைப்பு அற்றவிடத்து விளங்கி மேம்படும். சிவபெருமான் விளங்கும் எட்டு இடங்களையும் எண்பேருலகமாகக் கொள்ளப்படும். அவை பூதங்கள் ஐந்து; ஞாயிறு திங்கள், ஆருயிர் மூன்று ஆகிய எட்டு எனப்படும். அம் முறையில் அடியேன் உடம்பினையும் கோவிலாகக் கொண்டருளினன். (அ. சி.) அது - சிவம். ஒரு தன்மை - அத்துவிதம். எது - எதனாலும். புது உணர்வு - ஞானம். புவனங்கள் எட்டு பஞ்சபூதம், சூரியன், சந்திரன், ஆன்மா என்பவைகளுடன் கூடிய புவனங்கள். இது உணர்ந்து - இச் சரீரமும் தனக்கோர் உருவமாம் என்று கருதி. (10) 1693. அகிலிட மாயறி யாமல் அடங்கும் உகலிட மாய்நின்ற வூனத னுள்ளே பகலிட மாமுனம் பாவ வினாசன் புகலிட மாய்நின்ற புண்ணியன் றானே. (ப. இ.) அனைத்தினும் செறிந்து அதற்கு அப்பாலுமாய்த் திகழும் சிவன் அகலிடமாய், மலப்பிணிப்பினரால் அறிய ஒண்ணாதவனாய், அனைத்தும் ஒடுங்கும் ஒடுக்க நிலையமாய் நின்றனன். நம் உடம்பகத்தும் ஞாயிற்றை இடமாகக்கொண்டு எழுந்தருளி எஞ்சுவினையாகிய சஞ்சிதத் தொகுப்புகளை எரிசேர் வித்தென அழிப்பன். அனைத்துயிர்க்கும் அனைத்துலகங்களுக்கும் புகலிடமாயுள்ள புண்ணியச் செல்வனாவன் சிவன். (ப. இ.) அறியாமல் - உணர்தற்கு அரிதாய். உகலிடம் - அழிதற்கு இடம். பகலிடமாம் - சூரிய மண்டலத்தை இடமாகக் கொண்டருளிய. முனம் - முன் பிறப்புக்களில் ஈட்டிய. (11) 1694. போது புனைகழல் பூமிய தாவது மாது புனைமுடி வானக மாவது நீதியுள் ஈசன் உடல்விசும் பாய்நிற்கும் ஆதி யுறநின்ற தப்பரி சாமே.1 (ப. இ.) மெய்யடியார்கள் பாடிப் பரவிப் பணிந்து திருமுறைப் போற்றித் தொடர் ஓதி வழிபட்ட நறுமலர் நிறைந்துள்ள திருவடிகள்
1. இன்னவுரு. சம்பந்தர், 3. 71 - 4. " உலகமே. சிவஞானசித்தியார், 5. 2 - 6.
|