வெட்டும் உயிரன்று. உயிர் உறையும் நுண் உடல். இவை உயிர்க்குத் திருவருளால் கொடுத்தருளப்பட்ட இயற்கைப் பிறப்புடல். இவை மான் என்று சொல்லப்படும் மூலப்பகுதியினின்றும் திருவருளால் தரப்பெறும். காலம், ஊழ், உழைப்பு, உணர்வு, விழைவு என்னும் ஐம்போர்வை சுற்றியதும் ஆருயிர் ஆளாகும். ஆளாகும் என்பதாள் தற்குமாளப்படும். கோளாதற் கும்மாம் குறி என்பதனால் ஆருயிர் கருவிகரணங்களை ஆளும்; கர்த்தாவாகிய சிவபெருமானால் ஆளப்படும். அத்தகைய உயிரின் உள்ளத்தின்கண் மாறாது நிலைபெற்று மன்னும் சிவபெருமான் உன்னுதற்கும் அரிய அருஞ்சைவர்மெய் (2139) ஆறாறு என்னும் முப்பத்தாறு தத்துவ முடிவின்கண் முடிவின்றி விளங்கும் படியிலா விழுப்பொருள். (அ. சி.) ஐவிதம் - கேட்டல், சிந்தித்தல், தெளிதல், நிட்டை, சமாதி. ஆறு ஆறு - 36 தத்துவங்கள். (17)
29. கேடுகண்டு இரங்கல் 2046. வித்துப் பொதிவார் விரைவிட்டு நாற்றுவார் அற்றதம் வாணாள் அறிகிலாப் பாவிகள் உற்ற வினைத்துயர் ஒன்றும் அறிகிலார் முற்றொளி தீயின் முனிகின்ற வாறன்றே. (ப. இ.) வித்தின்பொருட்டு நெல்லை நன்றாக உணக்கிப் பேணி வைப்பர். விதைவிதைத்து நாற்றுண்டாக்குவார்கள். உடலுக்கு வேண்டும் உணவினைத் தேடி எத்துணைப் பாடுபடுகின்றனர். இவர்கள் தங்களுடைய வாழ்நாள் இன்னும் எத்துணைப்பொழுது நிற்கும் என அறிய எவ்வகை முயற்சியும் செய்கின்றிலர். செய்வாரேல் நன்னெறி நான்மைவழி நாளும் ஒழுகுவர். அங்ஙனம் ஒழுகாமையால் தம் வாழ்நாள் அற்ற தன்மையினை அறிகின்றிலர். இவர்களே பழுதகலா முழுப்பாவிகளாவர். மேலும் தங்களை வந்து பொருந்தும் இருவினைத் துன்பத்தினைப் பற்றி ஒன்றும் அறிகிலர். இவர்கள் இன்புற எண்ணும் உலகப்பற்றின் வழியே மாண்டுமடிகின்றனர். முனிகின்றது; மடிகின்றது. இதற்கு ஒப்பு முற்றொளி என்று சொல்லப்படும் நிறைந்த விளக்கொளியின்முன் விட்டிற்பூச்சி வீழ்ந்து மாண்டு மடிகின்றதாகும். விட்டிற்பூச்சி அவாய் நிலையான்வந்தது. (அ. சி.) வித்துப் பொதிவார் - கன்மத்தை ஈட்டுபவர். விரைவிட்டு நாற்றுவார் - பிறந்துழல்வார். தீயின் முனிகின்ற - விட்டில் விளக்குத் தீயில் மடிகின்ற. (1) 2047. போது சடக்கெனப் போகின் றதுகண்டும் வாதுசெய் தென்னோ மனிதர் பெறுவது நீதியு ளே1நின்று நின்மலன் தாள்பணிந்து ஆதியை அன்பில் அறியகில் லார்களே.
1. துஞ்சும். அப்பர், 5. 93 - 8. " யாக்கையை. நாலடியார், 28.
|