திருக்கோவில்களையும் மறைந்து நின்றருளும் திருவுருவினையும் காணுமாறு சென்று கண்டு வழிபட்டுக் கனிந்தொழுகுவர். இவையனைத்தையும் கண்டும் கேட்டும் ஒன்றும் நினையாதிருக்கின்றனர் தீவினையாளர். காடு முதலாகிய வைப்புமுறை 'மாயோன் மேய காடுறை யுலகமும்' என்னும் (5) தொல்காப்பியப் பொருள் நூற்பாவை முழுதொத்துப் போதரும் விழுமிது காண்க. (அ. சி.) மூடுதல் - அஞ்ஞானம் சேருதல். கடம் - பாலைநிலம். ஊடும் உருவினை - ஊடுருவி நிற்கும் உருவமாகிய சிவத்தை. (5) 2522. ஆவது தெற்கும் வடக்கும் அமரர்கள் போவர் குடக்குங் குணக்குங் குறிவழி நாவினின் மந்திர மென்று நடுவங்கி வேவது செய்து விளங்கிடு வீரன்றே. (ப. இ.) சிறப்பினை நல்கும் சீருடைப் புலம் தெற்கும் வடக்கும் ஆகும். ஆவது: சிறப்பு; வீடுபேறு; திருவடியுணர்வு. செந்நெறிச் செல்வர் இப்புலம் சேர்வர். பிறப்பினை நல்கும் பீடுடைப்புலம் மேற்கும் கிழக்குமாகும். நீர்க்குமிழியனைய நிலையில்லா வாழ்வினை ஓர்த்துணராது அமரர்கள் விரும்புவர். அவர்கள் அப் புலஞ்சேர்வர் சிறப்பினர் என்றும் ஓதுங்குறிவழி நாவினிலைந்தெழுத்தை நாளும் நவில்வர். இந்நிலைக்குப் பெருந்துணையாயுள்ள நடுநாடியாகிய அங்கியின்வழி உயிர்ப்பினைச் செம்மைப்படுத்தி விளங்கிடுவீராக. தெற்கும் வடக்கும் செந்தமிழ்ச் செல்வராம் செம்பொருட்டுணிவினர் சென்று வருவது திருமூலர் வரலாற்றாலும் பிறவாற்றாலும் உணரலாம். (அ. சி.) நடுவங்கி வேவது செய்து - சுழுமுனையில் மனதைச் செலுத்தி. (6) 2523. மயக்குற நோக்கினும் மாதவஞ் செய்வார் தமக்குறப் பேசின தாரணை கொள்ளார் சினக்குறப் பேசின தீவினை யாளர் தமக்குற வல்வினை தாங்கிநின் றாரே. (ப. இ.) நன்னெறி நான்மை நற்றவமாகிய அழிவில் மாதவஞ் செய்வார் நன்னெறிக்கண் வந்து கூடுமாறு அருளால் நோக்கினும், தமக்குப் பொருந்துமாறு செவியறிவுறுக்கும் திருவைந்தெழுத்தின் திறத்தினைக் கொள்ளார். அவர் யாரெனின் பகச் சொல்லிக் கேளிர்ப் பிரிக்கும் சினமுடன் பேசும் தீவினையாளர். அவர்க்கு நீங்கா உறவாவது வல்வினையாகும். அதனையே எங்கும் தாங்கி நின்றாராவர். (அ. சி.) பேசின - உபதேசித்த. தாரணை - மந்திரம். (7)
|