1075
 

2.ஆருயிர் : 1. திரியக்காண்டல் 2. இரட்டுறக்காண்டல் 3.
தெளியக்காண்டல்.

3.சிவம் : திரியக்காண்டல் 2. இரட்டுறக்காண்டல், 3. சிவத்தோய்வு 4. சிவத்துய்ப்பு என்ப. திரியக்காண்டலை உருவம் எனவும், இரட்டுறக் காண்டலைத் தரிசனம் எனவும், தெளியக்காண்டலைச் சுத்தி எனவும் கூறுப. இதுபோல் சிவத்துக்குக் கூறுங்கால் தெளியக்காண்டலுக்கீடாகச் சிவயோகம் எனவும் அதன்மேல் சிவபோக மெனவும் பிறிதொன்று கூட்டியும் கூறுப. இதன் விரிவுகளெல்லாம் உண்மை நெறி விளக்கம் முதலிய மெய்கண்ட நூல்களில் பரக்கக்காண்க.

(அ. சி.) கோசம் - ஐந்து கோசங்களும். பறவை - சீவன். வனம் - தத்துவக்கூட்டம். சோடசமார்க்கம்- சரியையிற் சரியை முதல் 16. தசாங்கம் - தசகாரியம்; அவை தத்துவரூபம் - தத்துவ தரிசனம் முதல் சிவபோகம் ஈறாகப்பத்து.

(8)

2616. மருவிப் பிரிவறி யாஎங்கள் மாநந்தி
உருவ நினைக்கநின் றுள்ளே யுருக்குங்
கருவிற் கரந்துள்ளங் காணவல் லார்க்கிங்கு
அருவினை கணசோரும் அற்றார் அகத்தே.

(ப. இ.) செவ்விவாய்ந்த ஆருயிரைத் திருவருளால் மருவிய எங்கள் மாநந்தி பின்னைப் பிறவியிற் பிரித்தறியான். அவனது திருவருட்டிருவுருவை உணர்வின்கண் நினைக்க ஆருயிரின் தன்முனைப்பாகிய இருளைக் கெடுக்கும். எல்லாவற்றிற்குங் காரணமாயிருக்கிற அச் சிவத்தின்கண் ஒடுங்கிக் காணவல்லார்க்கு இங்குச் சார நிற்கும் அருவினைகள் கண் சோர்ந்து அற்றழியும். இவ் வினைகட்கு அகமாக இருக்கும் மாயையும் அழியும் கருவில் - காரணத்தில்.

(அ. சி.) மருவிப் பிரிவு - கூடிப்பிரிதல் . உருக்கும் - தற்போதத்தைக் கெடுக்கும்.

(9)

2617. தலைப்பட லாமெங்கள் தத்துவன் தன்னைப்
பலப்படு பாசம் அறுத்தறுத் திட்டு
நிலைப்பெற நாடி நினைப்பற வுள்கில்
தலைப்பட லாகுந் தருமமுந் தானே.

(ப. இ.) சிவஞானத் திருவருளால் மெய்ப்பொருளாம் சிவபெருமானைத் தலைப்படுதல் உண்டாகும். தத்துவன் - மெய்ப்பொருள் அத்தலைப்பாட்டினால் பலவகையாகக் கிளைக்கும் ஆசாபாசங்களை அறுத்து அறுத்திட்டு ஒழிக்கலாம். என்றும் பொன்றா நிலைமையுடன் திருவடிக் கீழ் நிலைபெற நாடுமின். நீங்கா நினைவுடன் இருப்பின் அவன் திருவடியைத் தலைப்படுதலாகும். அவன் போகமீன்றருள் புண்ணிய வடிவினன் ஆவன் அறவாழி அந்தணன் ஆவன்.

(அ. சி.) பலப்படு - பலவகைப்பட்ட . தருமமும் - அறத்தின் வடிவாயுள்ள சிவமும்.

(10)