2630. மலையு மனோபவ மருள்வன் வாவன நிலையிற் றரிசனம் தீப நெறியாந் தலமுங் குலமுந் தவஞ்சித்த மாகும் நலமுஞ்சன் மார்க்கத் துபதேசந் தானே. (ப. இ.) நிலைபேறின்றி ஓவாது அலைந்துகொண்டேயிருக்கும் மனமும் உயிர்ப்பு மயங்குவதற்கு இடமாகவுள்ளனவாகும். அந்நிலையில் மயக்கம் ஒழிப்பதற்குச் சிவகுருவின் விளக்கக் காட்சி எய்துதல்வேண்டும். அதுவே ஈண்டுத் தீபநெறி எனப்பட்டது. இவ் விளக்கத்திற்கு இடமும் சார்பும் உள்ளமும் தவமுமம் தூய்மையாதல் வேண்டும். அதுவே வாய்ப்புடையதாகும். சிவமறையாகிய நலம் நன்னெறிக்கண் செவியறிவுறுக்கும் அருமறையாகும். அருமறை-உபதேசம். (அ. சி.) மலையும் - மயங்கும். மருள்வன - மயங்குவன. (5) 2631. சோடச மார்க்கமுஞ் சொல்லுஞ்சன் மார்க்கிகட்கு ஆடிய ஈராறின் அந்தமும் ஈரேழிற் கூடிய அந்தமுங் கோதண்ட முங்கடந்து ஏறியே ஞானஞே யாந்தத் திருக்கவே. (ப. இ.) நன்னெறி நான்மை நல்லார் சன்மார்க்கர்கள் எனப்படுவர். அவர்கட்கு நான்மை நெறியும் ஒவ்வொன்றும் நான்கு நான்காகப் பகுக்கப்படும். அம்முறையில் அவை (2615) பதினாறு வகைப்படும். அவற்றுள் பன்னிரண்டின் அந்தம் செறிவில் அறிவாகும். பதினான்கின் அந்தம் அறிவில் நோன்பாகும். கோதண்டமெனப்படுவது அறிவிற் செறிவாகும். திருவருளால் இவையனைத்தையும் பயின்று கைவந்தபின், ஒன்றாவுயர்ந்த (பதினாறாவதாகிய) அறிவின் அறிவு வாயிலாகத் திருவடிப் பேறு எய்தும். அறிவின் அறிவு - ஞானத்தின் ஞானம். (அ. சி.) சோடசமார்க்கம்-சரியையிற் சரியை முதல் 16 நெறிகள். ஈராறின் அந்தம்-யோகத்தில் ஞானம். ஈரேழிற் கூடிய அந்தம்-ஞானத்தில் கிரியை. கோதண்டமும்-ஞானத்தில் யோகமும். ஞேயாந்தம்-ஞானத்தில் ஞானம். (6)
4. ஒளி 2632. ஒளியை யறியில் உருவும் ஒளியும் ஒளியும் உருவம் அறியில் உருவாம் ஒளியின் உருவம் அறியில் ஒளியே ஒளியும் உருக வுடனிருந் 1தானே. (ப. இ.) ஆருயிரின் இயற்கை நிலை பளிங்கனைய அறிவொளியாகும். அருளால் அதனை நாடின் அவ்வுயிரின் நிலைக்களமாகிய உடம்பின்
1. முருகார். அப்பர், 4. 114 - 2.
|