செய்தல்வேண்டும். நானெறி 'சீலம், நோன்பு, செறிவு, அறிவு.' இவை ஒவ்வொன்றும் நந்நான்காக விரியும் எனவே அவை பதினாறாகும். இவையே 'நானாவிதம்' என ஓதப்பட்டன. இவ்வகைத் திருத்தொண்டினை அருளால் நாடொறும்புரிந்து நந்தியை நாடுங்கள். உடம்பகத்துக் காணப்படும் மூலாதாரம் முதலாகச் சொல்லப்படும் ஆறு நிலைகளும் தனித்தனித் தாமரை வடிவாக இருப்பன என்ப. இத் தாமரைகளின் ஊடு முறையாக உயிர்ப்பின்வழிச் சென்று உணர்தல் வேண்டும். உணர்ந்தபின் அவ்வாதாரங்களினின்று இயைந்து இயக்கும் தெய்வங்கள் புலனாகும். இயைந்தியக்கும் தெய்வம் அதிட்டான தெய்வம். அவை, 'பிள்ளையார், அயன், அரி, அரன், ஆண்டாள், அருளோன்' என்ப. புலனாகியதும் அத் தெய்வங்கள் வழிபடுவார்க்கு வயப்பட்டருளும். இந்நிலையில் திருவடியின்பத் தெவிட்டாச். செழுந்தேனை ஆரப்பருகி அளவிலா இன்பத்தழுந்துதல் உண்டாம். (அ. சி.) நானாவிதம் - சரியையிற் சரியை முதல். ஊனார் கமலம்- ஆறு ஆதாரங்கள். வானோர் உலகம் - நிராதாரங்கள். தேன் - சிவானந்தம். (7) 2947. வந்துநின் றானடி யார்கட் கரும்பொருள் இந்திர னாதி இமையவர் வேண்டினுஞ் சுந்தர மாதர் துழனியொன் றல்லது அந்தர வானத்தின் அப்புற மாகுமே. (ப. இ.) விழுமிய முழுமுதற் சிவபெருமானைக் கெழுமிய செந்தமிழ்த் திருமுறை மறையினால் வழிபடுவோர் சிவனடியாராவர். அவ் வழிபாட்டின் பெறுபேறாக எல்லா நிலைகட்கும் அப்பாலாகி நின்றினிதருளும் அவன் அரும்பொருள் எனப்படுவன். அவன் அகம்புறமாய் ஈரிடத்தும் முன்னேவந்து எதிர்தோன்றியருளினன். அருளவே 'செங்கணவன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால். எங்கும் இலாததோர் இன்பம் நம்பாலதாக' என்பது போன்று பேரின்பம் பெருகுவதாயிற்று. இந்திரன் முதலாகச் சொல்லப்படும் தேவர்கள் விரும்பினும் ஆண்டெல்லாம் மாண்டு மடிவதும், மீண்டும் பிறப்பினைத்தருவதுமாய பெண்ணின்பமே உண்டாகும். கண்ணுதலோன் காட்டிக் காணும் திருவடியின்பம் அவ்விண்ணுலகில் கனவு காண்டற்கும் ஒண்ணாத தொன்றென்க: 'அண்டர் வாழ்வும் அமரர் இருக்கையும் கண்டு வீற்றிருக்கும் கருத்தொன்றிலோம்' எனவும், 'கொள்ளேன் புரந்தரன் மாலயன் வாழ்வு' எனவும் முறையே அருளான் எழுந்த மறையும் மறை முடிவும் மேலதனை வலியுறுத்தும் என்க. (அ. சி.) சுந்தர மாதர் - அழகு பொருந்திய மாதர். துழனி - போகம். அந்தரவானம் - ஒளிஉலகம். (8) 2948. மண்ணிற் கலங்கிய நீர்போல் மனிதர்கள் எண்ணிற் கலங்கி இறைவன் இவனென்னார் உண்ணிற் குளத்தின் முகந்தொரு பால்வைத்துத் தெண்ணிற் படுத்தச் சிவனவ 1னாகுமே.
1. தெள்ளத். அப்பர், 5. 91 - 10. " மருளவா. " 4. 76 - 4.
|