(ப. இ.) உயிர்க்கு உயிராய் உணர்வளிக்கும் உள்ளுண்மையாகிய பதியினை ஓரார். அப் பதியினை உணராமையால் பசு பாசமாகிய உயிர்தளை என்னும் பொருள்களையும் உணரமாட்டார். 'வேண்டுவார்க்கு வேண்டுவதே' ஈயும் பெருவள்ளலாகிய சிவபெருமான் முழுமுதல்வன். அவன் திருவருளின் வழிநின்று வாழுதல் செய்யார். தெளிந்த உண்மையாகிய திருவடியுணர்வு சிவஞானம் எனப்படும். அச்சிவஞானத்தால் எய்தப்பெறுவது சிவயோகம். சிவயோகம் - சிவ இணக்கம். எண்ணல் இருத்தல் இயைதல் இயங்கல் நான்கும் முறையே. உருவ தரிசன யோக போகம் என்பர். இவற்றை எண்ணலிருத்தல் இயைதல் ஏற்றியங்கல் ஏருருவம், கண்காட்சி யோகபோகம் என்பதனால் நினைவு கூர்க. இச் சிறந்த சிவயோகத்தையும் சேரமாட்டார்; யாரென்றால்? அழிகள்ளுண்ணும் மாந்தர் என்க. இம் மாந்தர் சிவபெருமான் தங்களுக்குப் பிறப்பினைத் தந்தருளிய திருவுள்ளக் குறிப்பினையும் உணராதவராவர். (அ. சி.) உள் உண்மை - உள்ளத்தின்கண் இருக்கும் இயல்பு. தெள் உண்மை - தெளிந்த. (5) 316. மயக்குஞ் சமய மலமன்னு மூடர் மயக்கு மதுவுண்ணு மாமூடர் தேரார் மயக்குறு மாமாயை மாயையின்1 வீடு மயக்கில் தெளியின் மயக்குறும் அன்றே. (ப. இ.) அறிவினைக் கெடுத்து அல்லற் படுத்தும் எதுவும் ஆன்றோரால் கள்ளென்றே கொள்ளப்படும். ஆதலால் தெளிவும் விரிவும் இல்லாத அறிவினர் மலம் நிறைந்த மூடராவர். அவர்கள் எரிவினால் ஏற்படுத்தும் சமயம் மயக்கந்தரும் வாய்மையில்லாத பொய்ச்சமயமாகும். இச் சமயப் புன்மையினையும் நன்மையினைப்போல் மேற்கொண்டு ஆயாது நிற்கும் தீயார் அறிவைக் கெடுக்கும் மதுவினையுண்ணும் மாமூடரோடொப்பர். அவர் தெளிவித்தாலும் தெளிந்து கொள்ளமாட்டார். சமயப் பொய்ப் பற்றும் ஒருவகை மதுவென்றே சொல்லப்படும். இத்தகைய பெரிய மயக்கங்களில் நின்று அருளால் தெளிந்தவர் தூவாமாயையினின்றும் விலகுவர். தூவாமாயையினை அசுத்த மாயை என்பர். இது நில முதல் மாயையீறாக முப்பத்தொரு தத்துவங்களையுடையது. இம் மாயை விலகுவதுபோன்று தெளிவுடையார்க்கு மாமாயை என்று சொல்லப்படும் தூமாயையும் விலகும். தூமாயை ஐந்து தத்துவங்களையுடையது. அஃது ஆசான் முதல் அத்தன் ஈறாகக் கூறப்படும். இதனைச் சுத்த வித்தை முதல் சிவம் ஈறாக எனவும் கூறுவர். மாயையின் தூவாமாயையைப் போல. இன்: ஐந்தன் உருபு ஒப்புப் பொருள். மாமாயை - தூமாயை. வீடும் - விலகும். சமய மலமன்னும் மூடர்: மலத்தொடர்பான நெறியொழுகும் அறிவிலார். (6) 317. மயங்குந்2 தியங்குங்கள் வாய்மை அழிக்கும் இயங்கும் மடவார்தம் இன்பமே எய்தி முயங்கும் நயங்கொண்ட ஞானத்து முந்தார் இயங்கும் இடையறா ஆனந்தம் எய்துமே.
1. மாயைமா. சிவப்பிரசாசம், 7 . 2. 2. தாயினு. அப்பர், 5 . 100 - 10.
|