194
 

425. மண்ணொன்று தான்பல நற்கல மாயிடும்
உண்ணின்ற யோனிகட் கெல்லாம் ஒருவனே1
கண்ணொன்று தான்பல காணுந் தனைக்காணா2
அண்ணலும் இவ்வண்ண மாகிநின் றானே.

(ப. இ.) மண் ஒன்றுதானே பொருள் முதற்காரணமாய் நின்று பானை, சட்டி, கலயம், குடம் முதலிய பல்வேறு வடிவமாகத் திரியும். அத்திரிபும் அதனைப் பெற்றுப் பயன்பெறுவார் தகுதிக்கு ஏற்றவாறு அமைந்ததாகும். அவ்வமைவும் வினைமுதற் காரணனாகிய ஒரு குயவனால் ஆகும். ஈண்டு இரட்டுற மொழிதலான் மண் இடவாகு பெயராகக் குயவனைக் குறிக்கும். அவாய் நிலையான தண்ட சக்கர முதலிய துணைக் காரணங்களும் பெறப்படும். இதுபோல் ஆருயிர்கட்கு உயிருக்கு உயிராய் என்றும் பிரிப்பின்றி நின்றருளும் முழுமுதற் சிவபெருமான் ஒருவனே. அவனே வினைமுதற் காரணண் ஆவன். அவன் நால்வகைத் தோற்றத்து எழுவகைப் பிறப்பினுள் எண்பத்து நான்கு நூறாயிர வடிவ வேறு பாட்டோடு கூடிய உடம்புகளைப் பொருள்முதற் காரணமாகிய தூவாமாயையினின்றும் படைத்தருள்கின்றனன். அவனுக்குத் துணைக் காரணம் அவனின் வேறல்லாத திருவருளும் அதன் வழித்தாய ஆருயிர்களின் இருவினைகளுமாம் என்க. பொருள்முதற் காரணம் - முதற்காரணம். வினைமுதற் காரணம் - நிமித்தகாரணம். கண்ணிரண்டும் ஒன்றனையே காண் என்பது போலக் கண்ணொன்றே பல பொருள்களையும் உயிர் கலந்து காட்டக் காணும், ஆனால் காட்டிய உயிரையும் காணாது காணும் தன்னையுங் காணாது. இதுபோல் ஆருயிர்கட்குக் கட்டு ஒட்டு என்னும் ஈரிடத்தும் அண்ணலாகிய சிவபெருமான் உடனாய் நின்று முறையே சுட்டுப்பொருள்களையும் சுட்டிறந்து நின்ற முற்றுப் பொருளாகிய தன்னையும் காட்டுவன். அவ்வுயிர் கட்டு நிலையில் காட்டுகின்ற சிவனையும் காண்கின்ற தன்னையும் காணமாட்டாது. ஒட்டுநிலையில் தன்னையும் தலைவனையும் அன்னவன் துணையால் கண்டின்புறும். யோனிகள் - உடல்கள். இவ்வண்ணம் - கண்போல் உயிர்களும் தமக்குக் காட்டும் துணையாம் சிவபெருமானைத் தம் முனைப்பால் காணா என்பதாம்.

(அ. சி.) யோனிகள் - நால்வகைப் பிறப்புகள்; அண்டசம் முதலியன.

(9)


1. காரிய. சிவனஞாசித்தியார், 1. 1 - 18:

2. காட்டிய. சிவஞானபோதம். 9. 1 - 2.