பேரருளில் சாரும் தன்மையை அறிவர். இவர்களே முறையானுணர்ந்த முழுநிலை யன்பராகுவர். அறிவாய் - திருவருள் துணையால் திருவடியுணர்வாய். அசத்தென்னும் - நிலையில்லாததென்று சொல்லப்படும். ஆறாறு - அருஞ்சைவர்கள் கொள்ளும் முப்பத்தாறு தத்துவங்களும். அகன்று - அருளால் வேறென உணர்ந்து பற்றுநீங்கி. செறிவான - பிணித்திருக்கின்ற. அருள் - சிவபெருமானின் திருவருளாற்றல். பெற்றி - தன்மை. (அ. சி.) அசத்தென்னும் ஆறாது - 36 தத்துவங்கள். (20)
9. சமாதி (நொசிப்பு) 598. சமாதி யமாதியிற் றான்செல்லக் கூடும் சமாதி யமாதியிற் றானெட்டுச் சித்தி சமாதி யமாதியில் தங்கினோர்க் கன்றே சமாதி யமாதி தலைப்படுந் தானே. (ப. இ.) தீதகற்றல் நன்றாற்றல் ஆகிய இயமநியம முறைகளால் செயலறலாகிய சமாதியுண்டாகும். அதன் இயல்பினைக் கூறக் கேட்கில், அவற்றான் எட்டுச்சித்தியும் உண்டாகும். அந் நிலையின் நின்றவர்க்கே சமாதி முதலியன கைகூடும் என்க. சமாதி - நொசிப்பு. (அ. சி.) சமாது இயமம் ஆதியில்தான் - இயமம் ஆதிசாதனையால் உண்டாகும் சமாதி. (1) 599. விந்துவும் நாதமும் மேருவில் ஓங்கிடிற் சந்தியி லான சமாதியிற் கூடிடும் அந்த மிலாத அறிவின் அரும்பொருள் சுந்தரச் சோதியுந் தோன்றிடுந் தானே. (ப. இ.) நடுநாடியாகிய மேருவின்கண் விந்துநாதங்கள் நிலைபெற்று விட்டால் திருவருள் வெளிப்படுதலாகிய சமாதி கைகூடிடும். முடிவு பேறில்லாத அறிவினையுடைய அரும்பொருளாகிய சிவபெருமானின் எல்லையில்லாத வனப்புப்பேரொளி வயங்கித் திகழும். விந்து - உடலுர அமிழ்து. நாதம் - உயிர்ப்போசை. ஓங்கிடில் - நிலைத்திடில். சந்தியிலான - திருவருள் வெளிப்படுதலான. சமாதி - திருவடியுணர்வில் ஒடுக்கம்; நொசிப்பு. (அ. சி.) மேரு - புருவமத்தி. (2) 600. மன்மனம் எங்குண்டு வாயுவும் அங்குண்டு மன்மனம் எங்கில்லை வாயுவும் அங்கில்லை மன்மனத் துள்ளே மகிழ்ந் திருப்பார்க்கு மன்மனத் துள்ளே மனோலய மாமே.
|