ஆனைமுகன், அயன், அரி; அரன், ஆண்டான், ஐம்முகன் என்னும் இவர்கள் துணையுடன் சென்று; மீதான்...செல்ல - மேலான இடத்தில் விளங்கும் திருவருளாற்றல் ஒருகூறாய்ப் பொருந்தியிருக்கும் சிவத்துடன் பதினாறு கலைகள் பொருந்திய திங்கள் மண்டிலத்தையடைய; மீதொளி...யோகமே - மாற்றம் மனம் கழியநின்ற பரவெளி மேலிடத்து ஒடுக்கம் உண்டாம் என்க. யோகம் - ஒடுக்கம். (70) 690. மதியமும் ஞாயிறும் வந்துடன் கூடித் துதிசெய் பவரவர் தொல்வா னவர்கள் விதியது செய்கின்ற மெய்யடி யார்க்குப் பதியது காட்டும் பரமன்நின் றானே. (ப. இ.) இடமூச்சு வலமூச்சுக்களை முறைப்படி ஒடுக்கிச் செய்கின்ற அகத்தவத்தோரைத் தொன்மையான வானவர் வணங்குவர். மெய்யடி...றானே - அவரே மெய்யடியாராவர். அவர்க்குத் திருவடி காட்டும் முழுமுதற்சிவனும் முன் நின்றான் என்க. (அ. சி.) மதியமும் ஞாயிறும் - இடகலை பிங்கலை. (71) 691. கட்டவல் லார்கள் கரந்தெங்குந் தானாவர் மட்டவிழ் தாமரை யுள்ளே மணஞ்செய்து பொட்டெழக் குத்திப் பொறியெழத் தண்டிட்டு நட்டிடு வார்க்கு நமனில்லை தானே.1 (ப. இ.) உயிர்ப்பினை ஒடுக்குந் திறலினர்க்கு எங்கும்ஆம் உணர்ச்சி எய்தும். அதனால், அவர் எங்குந் தாமாவார். மட்டவிழ்... செய்து - மணம் கமழ்கின்ற பரவெளியில் தோன்றும் ஆயிரவிதழ்த் தாமரையின்கண். அன்னை அத்தனாகிய சத்திசிவங்களைக் கலந்துறச் செய்து; பொட்டெழ..தானே - உச்சித்தொளைவழி திறக்கும்படியாக உயிர்ப்பினால் மோதி ஐம்பொறிகள் புறஞ்செலாமல் அகத்தே புலன் கொள்ளுமாறு தண்டாகிய நடுநாடியிற் செலுத்தி நின்றிடுவார்க்குக் கூற்றுத் துன்பம் எய்தாது. (அ. சி.) கட்டவல்லார்கள் - பிராணவாயுவைக் கட்டவல்லவர்கள். மட்...குத்தி - சகசிர அறைக்குள்ளே பிரமரந்திர வழி திறக்கும்படி மோதி. பொறி எழ - பொறிகள் விடயங்களில் செல்லாமல். நட்டிடுவார் - நின்றிடுவார். (72)
1. ஊனி. சம்பந்தர், 3: 22 - 3. " நாலு. 12. பெருமிழலைக்குறும்பர், 10.
|