1261. கூறிய சக்கரத் துள்ளெழு மந்திரம் ஆறியல் பாக அமைந்து விரிந்திடுந் தேறிய அஞ்சுடன் சேர்ந்தெழு மாரண மாறியல் பாக மதித்துக்கொள் வார்க்கே. (ப. இ.) மேற்குறித்த சக்கரத்துள் தோன்றும் மந்திரம் ஆறு இயல்பு ஆகும். அங்ஙனம் அமைந்து விரியும் இவ்வாறனுள் மாரணம் ஒழிந்த ஐந்தும் பகைமையை வெல்லுவதற்காகப் பயன்படுத்தப்படும். ஆறுவகையாவன : தம்பனம், மோகனம், உச்சாடனம், வித்துவேசணம், மாரணம், வசியம். வித்துவேசணம் - கருடணை, (973-978) (அ. சி.) ஆறியல்பு : தம்பனம், மோகனம், வசியம், மாரணம், உச்சாடனம், வித்துவேடணம். அஞ்சுடன் - மாரணம் ஒழிந்த ஏனைய அஞ்சுடன். (31) 1262. மதித்திடும் அம்மையும் மாமாது மாகும் மதித்திடும் அம்மையும் அங்கனல் ஒக்கும் மதித்தங் கெழுந்தவை காரண மாகில் கொதித்தங் கெழுந்தவை கூடகி லாவே. (ப. இ.) அனைத்துயிர்க்கும் நீங்கா அருள் புரிபவள் என மதிக்கப்படும் அம்மையும், குறித்த சக்கரத்தின் முதல்வியுமாகும். அவ் வம்மையையே பயில்வார்க்குப் பகையை வெல்லத் துணைசெய்யும் அழகிய அனலையொத்து அவள் காணப்படுவள். அம்மை காரணமாக உடனெழும் ஐம்பூதங்களும் தொழில் செய்யும். அம்மையின் ஆணையின்றி அவை எத்தொழிலும் செய்ய வல்லனவாகா. (32) 1263. கூடிய தம்பனம் மாரணம் வசியம் ஆடியல் பாக அமைந்து செறிந்திடும் பாடியுள் ளாகப் பகைவரும் வந்துறார் தேடியுள் ளாகத் தெளிந்துகொள் வார்க்கே. (ப. இ.) பகையை வெல்லுதற்குக் கையாளப்படும் தம்பனம். மாரணம், வசியம் முதலியவை விளையாட்டாக எளிதாக வந்து பொருந்தியிடும். பாடிவீடொத்த உடம்பின்கண் பகைவரும் வந்து அணுகுறார். இவ் வுண்மையினை அம்மையின் திருவருளால் தெளிந்து கொள்வார்க்குப் பகையே உண்டாகாது. (அ. சி.) ஆடியல்பு - விளையாட்டு பாடி - பாடி வீடு; பகை அரசர் தங்குமிடம்; இங்கே சரீரம். (33) 1264. தெளிந்திடுஞ் சக்கர மூலத்தி னுள்ளே அளிந்த அகாரத்தை யந்நடு வாக்கிக் 1குளிந்த வரவினைக் கூடியுள வைத்து அளிந்தவை யங்கெழு நாடிய காலே.
(பாடம்) 1. குளிர்ந்த வரனைக்.
|