1378. நன்மணி சூலங் கபாலங் கிளியுடன் பன்மணி நாகம் மழுகத்தி பந்தாகுங் கன்மணி தாமரைக் கையில் தமருகம் பொன்மணி பூணாரம் பூசனை யானதே. (ப. இ.) மேல் ஓதிய சதாசிவ நாயகியின் திருக்கைகள் பத்திலும் காணப்படும் பொருள்கள் வருமாறு: அழகிய பளிங்குமாலை, முத்தலை வேல், மண்டையோடு, பசுங்கிளி, பல மணிகளையுடைத்தாகிய பாம்பு, மழுப்படை, கத்தி, பூப்பந்து, மாணிக்கம் போல் விளங்கும் செந்தாமரை, உடுக்கு என்பன. பொன்னாலும் மணியாலும் ஆகிய பல அணிகள் பூண்டவள். இத்தகைய திருவுருவே வழிபாட்டுக்குரிய திருவுருவமாகும். (85) 1379. பூசனைச் சத்திகள் எண்ணைவர் சூழவே நேசவள் கன்னிகள் நாற்பத்து நேரதாய்க் காசினிச் சக்கரத் துள்ளே கலந்தவள் மாசடை யாமல் மகிழ்ந்திருந் தார்களே. (ப. இ.) பூசனைக்குரிய திருவருளம்மை கன்னிப் பெண்கள் நாற்பதின்மர் சூழவீற்றிருப்பள். இக் கன்னிப் பெண்களைச் சூழ ஆற்றல் மிக்க நாற்பதின்மர் சூழ்ந்திருப்பர். இவற்றிற்கு நடுவே உலகச் சக்கரம் அமைந்திருக்கும். அச் சக்கரத்துள் வழிபாடு செய்வார் குற்றமடையாமல் அம்மை எழுந்தருளியிருப்பள் உலகச்சக்கரம் - காசினிச் சக்கரம்; பூப் பிரத்தான யந்திரம். (அ. சி.) எண்ணைவர் - நாற்பதின்மர். கன்னிகள் - பரிவார தெய்வப் பெண்கள். காசினி - பூமியில். (86) 1380. தாரத்தி னுள்ளே தயங்கிய சோதியைப் பாரத்தி னுள்ளே பரந்துள் எழுந்திட வேரது வொன்றிநின் றெண்ணு மனோமயங் காரது போலக் கலந்தெழு மண்ணிலே. (ப. இ.) தாரம் என்று சொல்லப்படும் ஓங்காரத்தினுள் சுடரொளி விளங்கும். அச் சுடரொளியைப் பாரமாகிய உயிர்ப்பினுள் நிறைந்து எங்கும் எழும்படி செய்தல் வேண்டும். அதற்கு வேராகிய மூலத்தினின்று எண்ணுதற்குரிய மனவடிவம் விளங்குதல் வேண்டும். அவ்வடிவம் உறக்க நிலையாகிய நெஞ்சத்திடத்து உயிர் நிற்பதுபோல் அம்மை வடிவில் அடங்கி நிற்கும். உயிர்ப்பு - பிராணவாயு. (அ. சி.) தாரம் - பிரணவம். பாரம் - பிராணவாயு. வேர் - மூலாதாரம். கார் - சுழுத்தி நிலை. (87) 1381. மண்ணில் எழுந்த அகார உகாரங்கள் விண்ணில் எழுந்து சிவாய நமவென்று கண்ணில் எழுந்தது காண்பரி தன்றுகொல் கண்ணில் எழுந்தது காட்சி தரஎன்றே.1
1. சிந்திப்பார். அப்பர், 5. 97 - 1.
|