(ப. இ.) புறவிருள் நிறைந்திருக்கின்ற அறையின்கண் உள்ள நுகர்பொருள்களை ஆராய்ந்து கைக்கொள்ளலுறுவார்க்கு அப் பொருளையும் நாடுவார் கண்ணையும் சூழ்ந்து ஒருங்கு விளக்கும் திருவிளக்கு விளங்கி நின்று எரிந்தாற்போன்று, அகவிருளாகிய மலமயக்கத்தால் அறிவு விளங்காத ஆருயிர் பேரின்பப் பெருவாழ்வு நல்கும் மெய்ப்பொருளாம் சிவத்தினைக் கூடி அழியா இன்பம் நுகர்தற்குத் திருவருள் விளக்கொத்து அவ் வுயிரின் அறிவினை விளக்கிச் சிவத்தினைக் காட்டித் திருவடியிற்கூட்டி வனப்பாற்றலாகத் துணைசெய்து நிற்கும். மெய்ப்பொருளாகிய அப் பெரும்நந்தி ஆருயிரின் நெஞ்சத் தாமரையில் வீற்றிருந்தருள்வன். அதனால் மாமலர்நந்தி எனப்படுவன். அப் பெருமான் ஆருயிர்களை ஆட்டலும் காட்டலும் கூட்டலும் ஊட்டலும் அவ் வுயிர்க்கு வாட்டமில் ஊணுமாய் விளங்குந் தன்மையினன். அதனால் அவன் ஒருவனே அம்மையப்பரென்னும் விட்டு நீங்கா ஒட்டியுறும் இருநிலையும் உடையனாவன். மாமலர் - சிவனடிமறவாத் தூயநெஞ்சம். (அ. சி.) இருட்டறையில் விளக்கொளியால் பொருளைக் காண்பது போல, அஞ்ஞான இருள் படர்ந்த சரீரத்தில் திருவருட் சத்தியின் ஒளியால் சிவமாகிய பொருளைக் காணலாம் என்றது இம் மந்திரம். (4)
மந்தம் (மட்டம்) 1492. மருட்டிப் புணர்ந்து மயக்கமும் நீக்கி வெருட்டி வினையறுத் தின்பம் விளைத்துக் குருட்டினை நீக்கிக் குணம்பல காட்டி அருட்டிகழ் ஞான மதுபுரிந் தானே. (ப. இ.) திருவருளம்மை ஆருயிர்கள் தன்மாட்டு விருப்பம் கொள்ளும்படி அவ்வுயிர்களை மயக்கிக் கூடினள். அவளே அவ் வுயிர்கள் பழமலப் பிணிப்பால் மாயையின்கண் மயங்கிக்கிடந்த மயக்கினை நீக்கியருளினள். அச்சுறுத்தி வினைகளை அறுத்துத் திருவடியின்பத்தினை விளைத்தவளும் அவளே. அவளே ஞானக்கண் பெறாது அகக்கண் குருடாயிருந்த குருட்டினை நீக்கியருளினள். எய்தற்குரிய நன்மைகள் பலவற்றையும் காட்டித் திருவருள் வண்ணமாகிய சிவஞானத்தினைப் பதித்தருளினவளும் அவளே. அங்ஙனம் செய்தருளியவள் வனப்பாற்றலாகிய திருவருளம்மை. வனப்பாற்றல்: இதன் முதலெழுத்து வகரம். இதுவே 'சிவ' என்பதிலுள்ளவை. (1) 1493. கன்னித் துறைபடிந் தாடிய ஆடவர் கன்னித் துறைபடிந் தாடுங் கருத்திலர் கன்னித் துறைபடிந் தாடுங் கருத்துண்டேற் பின்னைப் பிறவி பிறிதில்லை தானே.1 (ப. இ.) புறத்தே செந்தமிழ் நாட்டுத் தென்கோடி முனையாகிய கன்னியாகுமரி என்னும் கன்னித்துறைத் திருத்தநீர்படிந்து ஆடியவர்,
1. புறந்தூய்மை. திருக்குறள். 298. " கங்கை. அப்பர். 5. 99 - 2.
|