1819. மனபவ னங்களை மூலத்தான் மாற்றி அனித வுடற்பூத மாக்கி யகற்றிப் புனிதன் அருள்தனிற் புக்கிருந் தின்பத் தனியுறு பூசை சதாசிவற் காமே. (ப. இ.) மனமாகிய எண்ணத்தினையும், அதற்குத் துணையாம் பவனமாகிய உயிர்ப்பினையும் திருவைந்தெழுத்தால் வேறு புலன்களுக்குச் செல்லவொட்டாது சிவனடிக்கே மாற்றி, நிலையில்லாததாகிய பூதவுடற்கண் காணப்படும் ஐம்பூதங்களையும் அவ்வப்பூத முதற்கண் அருளால் ஒடுக்கித் திருவருளையே இடையறாது நினைக்கும் நினைவாகிய அருளுடன் பாக ஆக்கி அதன்கண் உறைந்து பேரின்பப் பேற்றிற்கு வாயிலாகிய தனியன்பின் வழிபாடு சதாசிவ வழிபாடாகும். மூலம் - திருவைந்தெழுத்து - அருள் - பேரறிவுப் பேராற்றல்; ஞானசத்தி. (அ. சி.) மனபவனங்கள் - மனமும் பிராணவாயுவும். அனிதம் - அநித்தியம். மூலத்தான் - அஞ்செழுத்தால். பூதமாக்கி அகற்றி - ஐம்புலன்களை ஒடுக்கி. புனிதன் அருள்தனில் - திருவருட்சத்தியில். (7) 1820. பகலும் இரவும் பயில்கின்ற பூசை இயல்புடை யீசாக் கிணைமல ராகப் பகலும் இரவும் பயிலாத பூசை சகலமுந் தான்கொள்வன் தாழ்சடை யோனே. (ப. இ.) புறத்தே விளக்கமுறும் பகல் இரவாகிய காலங்களில் அகத்தே அருட்பண்பாகிய மலரும், புறத்தே அதன் நினைவுக் குறியாம் நறுமலராகிய மலரும் ஆகிய இருவகை மலர்களும் இணைமலர் எனப்படும். இவையே சிவபூசைக்கு ஏற்றவையாகும். அன்பகத்தே பகலும் இரவும் எனப் பிரித்துப் பயில்வதற்கோர் இயைபின்று. ஆதலின், அவ்வுட் பூசை காலம் நீங்கயிதாகும். எனவே அப் பூசையினை ஒழிவின்றி எப்பொழுதும் இயலும் ஒப்பில் பூசை என்பர். இவ் விருவகைப் பூசையினையும் எழிலார் தாழ் சடையோன் என்று கொள்வன். (அ. சி.) பகலும் இரவும் பயிலாத பூசை - உட்பூசை. (8)
|