765
 

1945. பாருக்குக் கீழே பகலோன் வரும்வழி
யாருக்குங் காணவொண் ணாத அரும்பொருள்
நீருக்குந் தீக்கு நடுவே யுதிப்பவன்
ஆருக்கும் எட்டாதவ் வாதித்தன் தானே.

(ப. இ.) பார்போலும் மூலத்திடத்து மண்ணின் இயைபாம் வித்து நிலைக்குக் கீழே நிற்பது ஞாயிறு வரும்வழியாகும். அது திருவருள் துணையில்லாத யாவர்க்கும் காணவொண்ணாத அரும்பொருள். நீர்நிலையாகிய மேல்வயிற்றினுக்கும் தீநிலையாகிய நெஞ்சத்தினுக்கும் நடுவே அஞ்ஞாயிறு தோன்றும். அஞ்ஞாயிறு தம்முணர்வு முனனப்பால் ஆராய்வார் எவருக்கும் எட்டாத அரும்பொருட் பகலவன் ஆவன். மேல்வயிறு - மணிபூரகம். நெஞ்சம் - அனாகதம். ஆதித்தன் - பகலோன்.

(அ. சி.) பார் - மூலாதாரம். நீருக்கும் தீக்கும் நடு - மணிபூரகத்துக்கும் அனாகதத்துக்கும் நடு. வித்து - பீசம்.

(8)

1946. மண்ணை யிடந்ததின் கீழொடும் ஆதித்தன்
விண்ணை யிடந்து வெளிசெய்து நின்றிடுங்
கண்ணை யிடந்து களிதந்த வானந்தம்
எண்ணுங் கிழமைக் கிசைந்துநின் றானே.

(ப. இ.) நிலவுலகம் உருண்டையாக இருக்கின்றது. அஃது உருண்டு ஞாயிற்றைச் சுற்றி வருகின்றது. உலகம் தானாக உருள்வதற்குப் பகலும் இரவுங் கூடிய ஒருநாள் ஆகின்றது. அது ஞாயிற்றைச் சுற்றிவர முந்நூற்று அறுபத்தைந்தேகால் நாட்கொண்ட ஓர் ஆண்டு ஆகின்றது. இரவுப்பொழுது வருங்கால் அஞ்ஞாயிறு நிலத்தைப் பிளந்துகொண்டு போவதுபோல் நமக்குத் தோன்றுகின்றது. அங்ஙனம் மண்ணைப் பிளந்து ஓடும் ஞாயிறானது விண்ணின்கண்ணதாய்த் தன்னையும் பொருள்களையும் தன் கதிரால் விளக்கி நின்றிடும். அக் கதிரால் ஆருயிர்களின் கண்கள் விளக்கமுறும். அப்பொழுது ஆருயிர்கள் கண்டும் கொண்டும் உண்டும் கூடியும் இன்புற்றுக் களிக்கின்றன. அத்துடன் தன்னை அகந்தழீஇ நிற்பதாகிய தியானத்திற்கும் உரிமை கொடுத்தருளுகின்றனன். இத் தியான உரிமையே எண்ணுங் கிழமை என இயம்பப்பெற்றது. இசைந்துநிற்றல் - உடனாய் நிற்றல்.

(அ. சி.) இடந்து - பிளந்து. வெளிசெய்து - விளக்கி. எண்ணுங்கிழமை- தியானிக்கும் உரிமை.

(9)

1947. பாரை யிடந்து பகலோன் வரும்வழி
யாரும் அறியார் அருங்கடை நூலவர்
தீரன் இருந்த திருமலை சூழென்பர்
ஊரை யுணர்ந்தார் உணர்ந்திருந் தார்களே.

(ப. இ.) உலகம் ஞாயிற்றைச் சுற்றி வருகின்றது. ஆனால் ஞாயிறு உலகைச் சுற்றிவருவதாகக் கூறுவோர் உண்மை உணராதவராவர். அவ்வுண்மையினை நுண்ணுணர்வினரே உணர்வர். தாழ்ந்த நிலையினர் பொருட்டுச் செய்யப்பட்ட நூலினையே உயர்ந்தநூலாகக் கருதிச் சிலர்