794
 

26. அசற்குரு நெறி

2006. உணர்வொன் றிலாமூடன் உண்மையோ ராதோன்
கணுவின்றி வேதா கமநெறி காணான்
பணிவொன் றிலாதோன் பரநிந்தை செய்வோன்
அணுவின் குணத்தோன் அசற்குரு வாமே.

(ப. இ.) சிவகுரு எழுந்தருளிவந்து ஆருயிர்களை ஆட்கொள்ளும் நல்வழியாம் திருநெறிக்கு வழித்துணையாக நிற்பவன் குலகுரு அவனே குலதெய்வம். இவ் வுண்மை! திருஞானசம்பந்தப்பெருமானாராம் சிவகுரு எழுந்தருளப் பாண்டிமன்னனுக்கும் பாண்டி நாட்டிற்கும் வழித்துணையாக நின்றவர் மங்கையர்க்கரசியாராம் குலகுரு அவரே குலதெய்வம். இவ் வுண்மை சேக்கிழாரடிகள் அருளிய "மங்கையர்க்குத் தனியரசி எங்கள் தெய்வம்"1 என்ற மறை மொழியான் உணரலாம். குலகுரு வென்பார் திருக்கோவில் வழிபாடு செய்வாரும், சிவதீக்கை செய்விப்பாருமேயாவர். அவர்கள் செம்மையாளராக இருத்தல் வேண்டும். அத்தகைய பெருநிலைக்குப் பொருந்தாத் திருந்தாமாக்களாவார் சிவ உணர்வென்பது ஒரு சிறிதும் இல்லாத மூடன்; முப்பொருள் உண்மையாம் மெய்ம்மை உணராதோன்; அருமறையாம் திருவைந்தெழுத்துபதேசக் கணுவின்றியுள்ளோன். செந்தமிழ் வேதாகமநெறி காணாதவன்; தாழ்வெனும் தன்மையாம் அன்பும் பணிவும் ஒரு சிறிதும் இல்லாதோன்; சிவபெருமானையும் சித்தாந்த சைவத்தையும் இகழ்வோன்; பிறப்பு இறப்புக்கு உட்படுத்தும் ஆணவச் செருக்குடையோன் ஆகிய தன்மையாளராவர்.

(1)

2007. மந்திர தந்திர மாயோக ஞானமும்
பந்தமும் வீடுந் தரிசித்துப் பார்ப்பவர்
சிந்தனை செய்யாத் தெளிவியா தூண்பொருட்டு
அந்தக ராவோர் அசற்குரு வாகுமே.

(ப. இ.) மந்திரமாகிய மறைமொழி யுண்மையும், அதனைப் பொருண்மையுடன் விளக்கும் செந்தமிழ்ச் சிவாகம உண்மையும், அவ வழியாகப் பயிலும் செறிவுநிலையாம் யோகமும் அறிவுநிலையாம் ஞானமும், இவற்றால் நீங்கவேண்டிய பிறப்பும் ஒங்கவேண்டிய சிறப்புமாம் பந்தம் வீடும் திருவருளால் கண்டு காட்டுந் தன்மை வாய்ந்த நல்லார்பால் உபதேசம் பெற்று அவர் வழி நிற்றலே குலகுருவென வெளிப்போதற்குத் தகுதியாம் ஒளிச்சிறப்பென்க. அவ்வொளியே பார்ப்பவரைச் சிவமாக நினைக்கத்தூண்டும். தெளியப் பணிக்கும். இவை யொன்றும் இன்றி வயிற்றுப்பிழைப்பின் பொருட்டுப் போலியாகக் குருக்கள்கோலம் பூண்டும் கூசாமல் திருக்கோயில் வழிபாடுசெய்ய முன்வந்தும் திரியும் வஞ்சகர், அறிவிலாராவர். அந்தகர் - அறிவிலாதார,் குருடர் இத்தகையார் நாணமிலாதவராகலின் அகக்கண்ணே அன்றிப் புறக்கண்ணும் குருடராவர்.


1. மங்கையர்க்குத். 12. மங்கை.