848
 

(ப. இ.) உண்மையறிவில்லாத கோழையர் உடம்பகத்துத் தங்கியிருக்குந் தம் தன்மையை உணரமாட்டார். இவ் வுடம்பினையே சிவநினைவால், திருவெண்ணீறு சிவமணி பூணலால், சிவனடியாராகிய நடமாடுந் திருக்கோவில்களைச் சிவனெனவே தேறி வழிபடலால் மாற்றிச் சிவவுடலாக அமைத்துக் கொள்ளலாம். அங்ஙனம் அமைத்துக்கொண்டால் பிறப்பு இறப்புகளை அறுக்கும் பெருமறை 'சி'கரமாகும். இதனைப் பேசாமறை என்பர். இப் பேசாமறையே 'அசபை என' ஓதப்பெற்றது. அதனால் இறப்பு பிறப்புகளை ஒழிக்கலாம். அசபை - செபிக்கப்படாதது; தனியே ஒலிக்கப்படாதது. காமனை ஒடுக்கியவன் காமாரி. அவன் திருவடியைச் சாரக் காரணமாகிய நன்மையமைந்த நன்னெறி நான்மையினைக் கருவாகக்கொண்டு அவற்றின் வாயிலாக அவன் திருவடியைத் தேர்ந்து தொழுதால் சிவவுருக்கொண்ட வுடல் அழியாது. திருவடிக்கீழ் இருக்கலாம். சிவவுடல் - திருவருள் உடல்.

(8)

2111. ஒளித்திட் டிருக்கும் ஒருபதி னாலை
அளித்தனன் என்னுள்ளே ஆரியன் வந்து
அளிக்குங் கலைகளி னாலறு பத்தும்
ஒளித்திட்டு வைத்தான் ஒடுங்கிய 1சித்தே.

(ப. இ .) ஆருயிர்தோறும் 'விறகில்தீயின் நன்பாலிற்படு நெய் போல், மறைய நின்றுளனாகிய மாமணிச் சோதியான்' ஒளித் திட்டிருக்கும் ஒருபதி என்று ஓதப்பெற்றனன். அவன் அருளிய பொருளும் நெறியும் நந்நான்கு என்ப. அவை முறையே அறம், பொருள், இன்பம், வீடு எனவும், சீலம், நோன்பு, செறிவு, அறிவு எனவும் கூறப்படும். இவற்றை அளித்தருளினன். என்னுள்ளத்துள்ளே ஆரியன் என்னும் ஆசானாய் எழுந்தருளினன். ஆரியன்: நிறைந்தவன். ஆர்தல் - நிறைதல். இதுவே ஆன்றவன் சான்றவன் எனவும் வழங்கப்பெறும். அத்தகைய சிவகுருவானவர் உள்ளிருந்து உணர்த்தும் கலைகள் அறுபத்துநான்கு. அக் கலைகளின் வாயிலாக எண்ணத்தின் கருவியாகிய சித்தம் சிவன் திருவடியையன்றி வேறொன்றும் எண்ணாது ஒடுங்குமாறு செய்தருளினன். திருவடிப்புகலில் அடங்கியிருக்குமாறும் அருள்புரிந்தனன். ஒளித்திடுதல் - அடங்குதல். ஒரு பதி: ஒப்பில்லாத இறைவன்.

(அ. சி.) பதினாலை - பதினான்கு நூல்களை. ஆரியன் இயற்கெனவே உள்ளத்தின்கண் உள்ள சிவன். கலைகளின் நாலு அறுபத்து - 64 கலைகள்.

(9)

2112. மண்ணினில் ஒன்று மலர்நீரு மங்காகும்
பொன்னினில் அங்கி புகழ்வளி யாகாயம்
மன்னு மனோபுத்தி யாங்காரம் ஓரொன்றாய்
உன்னின் முடிந்ததொரு பூத 2சயமே.


1. சுழிந்தகங்கை. சம்பந்தர், 1. 53 - 6.

" தளங்கிளரும். அப்பர், 6. 73 - 9.

2. சுவையொளி. திருக்குறள், 27.

" அல்லல். திருக்குறள், 245.

" மனோபுத்தி. சிவஞான, 4. 1 - எடுத்துக்காட்டு.