(ப. இ.) இத் திருப்பாட்டு ஆருயிரின் நிலைமையினை ஓதுகின்றது. பொன்னாற் செய்யப்படும் அணிகள் அணிவாரால் போற்றப்பட்டுப் பெருமை எய்துகின்றன. அணிவாரும் அவற்றால் சிறப்பும் பெருமையும் உறப்பெறுகின்றனர். அவ் வணிகலன்களை அணியின் வேறுபாட்டுடன் காணுங்கால் பொன்னைப் பற்றிய குறிப்பும் காட்சியும் ஒருசிறிதும் புலனாகா. 'நாவலொடு பெயரிய பொலம்' என்னும் முறைப்படிப் பொன்னைப் பற்றிய வேறுபாடு ஆயுங்கால் அணியைப் பற்றிய குறிப்பும் காட்சியும் ஒருசிறிதும் தோன்றாவென்க. அதுபோல் உடல் கலன் முதலியவற்றை ஆயுங்கால் ஆருயிரின் குறிப்பும் காட்சியும் ஒருசிறிதும் தோன்றா. உடல் கலன் முதலிய பொருள்கட்கு மேலாக அறிவுள்ளதாய் அவற்றின் வேறாய் அவற்றை இயக்குவதாய் அவற்றாற் பயன் எய்தும்படி ஆண்டவனால் சேர்க்கப்பட்டதாய், அழிவில்லதாய், அவ்வாண்டான் அடிக்கீழ் வாழும் பெரும்பேற்றின்பு எய்தற்குரிய சிறப்பினதாய் உள்ள ஆருயிர் ஒன்றுண்டு என வழியளவை யான் ஆராயும்வழி அவ்வுடல்கலன்களைப் பற்றிய எண்ணமும் தோற்றமும் ஒருசிறிதும் புலனாகா. அதனால் தன்னை மறைத்தது தன் கரணங்கள், தன்னின் மறைந்தது தன் கரணங்கள் என்று ஓதியருளினர். (அ. சி.) தங்க நகையை நகை என்னும் எண்ணத்தோடு பார்க்குமிடத்துத் தங்கம் என்பது தோன்றாது. தங்கம் என்ற நோக்கத்துடன் பார்த்தால் நகை என்ற எண்ணம் இராது. அதுபோல், ஆன்மா தான் கருவி காரணங்களே என்று எண்ணினால் ஆன்ம தரிசனம் இல்லை. ஆன்மா தான் வேறு என்று நோக்கும்போது கருவி கரணங்கள் மறையும் என்பது இதன் கருத்து. (21) 2251. மரத்தை மறைத்தது மாமத யானை மரத்தின் மறைந்தது மாமத யானை பரத்தை மறைத்தது பார்முதற் பூதம் பரத்தின் மறைந்தது பார்முதற் பூவே.1 (ப. இ.) இத் திருப்பாட்டு "உலகமே உருவமாக யோனிகள் உறுப்பதாகக் கொண்டு அலகிலா நலங்கள்" என்றும் இடையீடின்றி ஒன்றாய் வேறாய் உடனாய் நின்று புரிந்தருளும் சிவபெருமானின் அரும் பெரும் தன்மையினை அருளுகின்றது. தேக்கு முதலிய சிறந்த மரங்களால் கைவல் தச்சன் ஓர் அழகிய யானையின் புனைஉரு அமைக்கின்றனன். அவ்வுருவினைப் பற்றிய எண்ணமும் ஆய்வுங்கொள்ளுங்கால் மரத்தைப் பற்றிய எண்ணமும் வேறுபாடும் ஒருசிறிதும் தோன்றா. மரத்தைப் பற்றிய எண்ணம் தோன்றுங்கால் யானையைப்பற்றிய எண்ணம் தோன்றுவதின்று. அதுபோல் சுட்டியுணரப்படும் உலகத்தையும். ஏனைப் பொருள்களையும் ஆராயுங்கால் முழுமுதற் சிவபெருமானின் எண்ணமும் பண்பும் உள்ளத்தின்கண் நண்ணுவதில்லை. ஆயிருர்களின் பொருட்டு வியத்தகு உலகுடல்களைப் படைத்து அவற்றுடன் விரவி நின்று இயக்காதியக்கிவரும் சிவபெருமானின் திருவுருவாம் திருவருள் இயல்பினையும் அவன்றன் அளத்தற்கரிய எண்பெரும் குணங்களையும் வழியளவையான் உன்னுங்கால் உலகுடற்பொருள்களைப் பற்றிய எண்ணம் ஒரு சிறிதும் தோன்றாது. அதனால் 'பார்முதற் பூதம் பரத்தை
(பாடம்) 1. பூதமே.
|