(ப. இ.) ஆருயிர்களின் அறிவுக்குக் கேடாகிற அழிவும், தோற்றமாகிய ஆக்கமும் இல்லை. சிற்றறிவுள்ள உயிர்களுக்கு முற்றறிவுள்ள சிவபெருமானே நிலைத்த சார்பாகும். வேறுசார்பில்லை. சார்பு - ஆதாரம். ஆருயிரறிவே பேருயிரின் அறிவுத்துணையால் தன்னையும் தலைவனையும் முறையே சார்வதும் சாரப்படுவதும் என அறிகின்றதென்று திருமறையும் திருமுறையுமாகிய செந்தமிழ் இறைநூல்கள் சிறந்து போதிக்கின்றன. மறை - நால்வர் நல்லருள். முறை - நம்பிரான் திருமூலர் நல்லருள். இவற்றையே தமிழ் வேதாகமங்கள் என்ப. (அ. சி) மறை ஈறுகள் - ஆகமங்கள். (4) 2319. மன்னிநின் றாரிடை வந்தருண் மாயத்து முன்னிநின் றானை மொழிந்தேன் முதல்வனும் பொன்னின்வந் தானோர் புகழ்திரு மேனியைப் பின்னிநின் றேனீ பெரியையென் றானன்றே. (ப. இ.) தன் திருவடியில் பெருங்காதலுடன் சார்ந்து நின்றவரிடத்து வலியவள்ளலாகிய சிவபெருமான் வந்தருள்வன். அங்ஙனம் வருவது மாயாகாரிய உடம்பினைப்பெற்ற இடையறாச் சிவநினைவுடன் வாழும் நல்லாரை நிலைக்களமாகக் கொண்டென்ப. ஆதலால் அம் மாயாகாரிய உடம்பினைப்பெற்று வாழும் ஆருயிர் நிலையினை முன் ஓதினேன். முழுமுதல்வனாகிய சிவபெருமானும் திருவருளால் கொள்கின்றனன் திருமேனி ஆதலால் அத் திருமேனி பொன்போல் மிளிர்வதாகும். அத் திருமேனியை அனைத்துலகத்தாரும் புகழாநிற்பர். திருவருளால் அப் புகழ்த் திருமேனியைப் பின்னுதலாகிய புணர்ப்பு முறையில் பொருந்தி நின்றேன். அக்காலத்து அச் சிவபெருமான் தன் அடிமையாகிய என்னை நோக்கி 'நீ பெரியை' என்றருளினன். புணர்ப்பு - அத்துவிதம். இதன்கண் நம் மூலர் தம்பின் நிலை யருளுகின்றனர். (அ. சி.) மாயத்து - மாயாமய தேகத்தில். பொன்னின் - பொன்னைப் போல. பின்னி - கலந்து. (5) 2320. அறிவறி வாக அறிந்தன்பு செய்மின் அறிவறி வாக அறியுமிவ் வண்ணம் அறிவறி வாக அணிமாதி சித்தி அறிவறி வாக அறிந்தனன் நந்தியே. (ப. இ.) சிற்றறிவு முற்றறிவாம் நிலை எய்துதலை அறிவு அறிவாக என ஓதியருளினர். அஃதாவது ஆருயிர் சிவபெருமானின் பெரு நிறைவில் ஒடுங்கிச் சிவமாக விளங்குவது. இது 'முழுநீறு பூசியவர் முனிவ'ராய்த் திகழ்வதையொக்கும். அறிவாக அறிந்தபின் பின்னை மறத்தல் பெரும் பிழையாகலின் மறவாது பெருங்காதல் செய்மின். பெருங்காதல் செய்வதாவது செயலற்று நிற்றலாகிய நிட்டையினைப் புரிதல். சிவமாம் பெருவாழ்வுபெற்ற அறிவு தாம்பெற்ற பேற்றினை இம் முறையாக நினைக்கும். அந் நிலையில் அணிமாதி சித்திகள் தாமே வந்து பொருந்தும். இவ் வண்ணம் சிவபெருமான் அறியும்படி அருள்புரிந்தனன்.
(அ. சி.) அறிவு அறிவாக - சீவன் சிவனாக. (6)
|