(அ. சி.) காரியம் ஏழ் - காரிய உபாதி ஏழ். அவை:- உடல், பொறி, கரணம் நான்கு, பிராணவாயு மூன்று ஆக ஏழு. காரணம் ஏழ் - காரண உபாதி ஏழ். அவை :- (1) எல்லாம் அழித்தல், (2) எல்லாம் படைத்தல், (3) எல்லாம் அறிதல், (4) எல்லாவற்றிற்கும் காரணமாதல், (5) எங்கும் வியாபித்திருத்தல், (6) எல்லாம் தானாதல், (7) எல்லாம் காத்தல். (1) 2457. மாயப்பாழ் சீவன் வியோமப்பாழ் மன்பரன் சேயமுப் பாழெனச் சிவசத்தி யிற்சீவன் ஆய வியாப்த மெனுமுப்பா ழாம்அந்தத் தூய சொரூபத்திற் சொல்முடி வாகுமே. (ப. இ.) மாயப்பாழ் மாயையின் உண்மைகண்டு கடத்தலாகும். சீவப்பாழ் ஆருயிரின் உண்மை கண்டு அகறல். வியோமமாகிய அருள் வெளிப்பாழ் அருள் உண்மை கண்டு அப்பாலாதல். இம் மூன்றும் சேய முப்பாழெனச் செப்புவர். சேய - நீண்டதாய. சிவசத்தியாகிய திருவருளில் ஆருயிர் அடங்கு நிறைவாய் நிற்பதெனு முப்பாழும் பேசப்படும். இவையனைத்தும் தூய சிவன் உண்மைக்கண் அவன் சொல்லிறந்த தொல்லோனாதலின் சொல்லிறந்த முடிவாகு மென்க. அகல் நிறைவு - வியாபகம். அமை நிறைவு - வியாப்பியம். அடங்கு நிறைவு - வியாத்தி. மாயப்பாழ் மன்னுயிர்ப்பாழ். மாலருட்பாழ் ஆம் மூன்றும், தூயமுப் பாழென்ப தோய்ந்து. (அ. சி.) வியாப்தம் - அடங்கி நிற்றல். (2) 2458. எதிரற நாளும் எருதுவந் தேறும் பதியெனும் நந்தி பதமது கூடக் கதியெனப் பாழைக் கடந்தந்தக் கற்பின் உதறிய பாழில் ஒடுங்குகின் றேனே. (ப. இ.) நாளும் ஆனேற்றினை உவந்து ஊர்ந்து உலகினுக்கருளும் ஒப்பில்லாத பதி சிவபெருமானாவன். அவனே நந்தி என்று அழைக்கப்படுவன். அவனுடைய திருவடியிணையினைக் கூடுதற் பொருட்டு நிலையெனக் கருதிய மாயை, உயிர், அருள் என்னும் முப்பாழையும் கடந்து, அவையனைத்தும் காரணம் பற்றிய கற்பனை (2465) என உதறி நீக்கி எஞ்சிய உருவற்ற பாழில் ஒடுங்குகின்றேன். பாழ் - உருவில்லது. கற்பனை யென்பது 'கற்பின்' எனச் செய்யுட் டிரிபாய் நின்றது. (அ. சி.) எதிரற - இணையில்லாமல். உதறிய - விலக்கியுள்ள. பாழில் - உருவம் அற்ற இடத்தில். (3) 2459. துரியம் அடங்கிய சொல்லறும் பாழை அரிய பரம்பரம் என்பர்கள் ஆதர் அரிய பரம்பரம் என்றே துதிக்கும் அருநிலம் என்பதை யாரறி வாரே.
|