வன்மையால் உளதாம் பயன் இன்ன தென்றறியார். வேங்கடம்: எரிந்து கொண்டிருக்கும் சுடுகாடு. விரகு - வழிவகை; சூழ்ச்சி. (அ. சி.) வேங்கடநாதனை - வேகும் இயல்புள்ள உடலுக்கு நாதனை. வேங்கடம் - உடல். (4) 233. சென்றுணர் வான்திசை பத்துந் திவாகரன் அன்றுணர் வால்அளக் கின்ற தறிகிலர் நின்றுண ரார்இந் நிலத்தின் மனிதர்கள் பொன்றுணர் வாரிற் புணர்க்கின்ற மாயமே. (ப. இ.) பத்துத் திசையினையும் ஊழ்மெய்யாகிய காலதத்துவம் ஞாயிற்றினைக் கருவியாகக் கொண்டு அளக்கின்றது. ஞாயிற்றினைத் திவாகரன் எனவும் கூறுவர். அத் திவாகரன் அளக்குந் தன்மை ஆருயிர்களின் வாழ்நாளை அளக்கின்ற தன்மை என உணரார். இந் நிலத்தின் வாழும் மனிதர்களே இவ்வுண்மையினையுணரும் இயல்பு வாய்ந்தவராவர். அத்தகையோரும் உணராது வீணாய்ப்பிறந்து இறந்து ஒழியும் மாக்கள் கூட்டத்தில் கலந்து விடுகின்றனர். இஃதென்னமாயம்! (அ. சி.) திவாகரன் - சூரியன். (5) 234. மாறு திருத்தி வரம்பிட்ட பட்டிகை பீறு மதனைப் பெரிதுணர்ந் தாரிலை கூறுங் கருமயிர் வெண்மயி ராவது ஈறும் பிறப்புமொ ராண்டெனும்1 நீரே. (ப. இ.) பட்டிகையாகிய பட்டாடையின்கண் ஏற்படும் மாறுதல்களைச் செம்மைப்படுத்தி விலை வரம்பும், கரை வரம்பும் பிறவரம்பும் செய்தமைத்து நல்கிய அப் பட்டாடையும் 'நூற்றுப் பத்தாயிரம் பொன் பெறினும் நூற்சீலை, நாற்றிங்கள் நாளுக்குள் நைந்து விடும்' என்பது முதுமொழியாதலின், நாளாக நாளாகக் கிழிந்தொழியும். இவ்வுண்மை உடலும் நாளாக நாளாகத் தளர்ந்து மாயும் என்பதனையே குறிப்பதாகும். இவற்றைப் பலர் பெரிதும் உணர்ந்தாரல்லர். சிறப்பித்துச் சொல்லப்படும் நீலமணியின் மிக்க கருமை வாய்ந்த தலைமயிர், கொக்கின் தூவியன்ன வெண்மையாவதும் காண்கின்றனர். ஒவ்வொரு நாளும் ஞாயிறு தோன்றி மறைவதையும் காண்கின்றனர். அது தம்முடைய வாழ்நாளாகிய அகவையை ஆண்டெனும் பெயரால் ஈர்ந்து செல்லும் காலத்தன்மை என்று உணர்கிலர். இந்நிலைக்கு வருந்தாது மகிழ்ந்து கொண்டிருப்பது அறிவிலார் செயலாகும். அகவை - ஆண்டு; வயது. நீர் - தன்மை. (அ. சி.) பட்டிகை - பட்டாடை. (6) 235. துடுப்பிடு பானைக்கும் ஒன்றே அரிசி அடுப்பிடு மூன்றிற்கும் அஞ்செரி கொள்ளி அடுத்தெரி யாமற் கொடுமின் அரிசி விடுத்தன நாள்களும் மேற்சென் றனவே.
1. நாளென. திருக்குறள், 334.
|