328
 

சனி ஞாயிறு செவ்வாய்க்கிழமைகளில் வலமூக்கின்வழியாக ஓடுதல் வேண்டும். வியாழக்கிழமைக்கு வளர்பிறையில் இடமூக்கும் தேய் பிறையில் வலமூக்குமாக ஓடுதல் வேண்டும்.

(1)

771. வெள்ளிவெண் திங்கள் விளங்கும் புதன்மூன்றுந்
தள்ளி இடத்தே தயங்குமே யாமாகில்
ஒள்ளிய காயத்துக் கூன மிலையென்று
வள்ளல் நமக்கு மகிழ்ந்துரைத் தானே.

(ப. இ.) வெள்ளி, திங்கள், புதன் ஆகிய மூன்றுநாட்களிலும் இயல்பாகவே பயிற்சிவயத்தால் வலமூக்கைவிட்டு இடமூக்கின் வழியாகவே ஓடின் சிறந்த உடம்பினுக்கு அழிவில்லை என்று வள்ளலாகிய சிவபெருமான் மகிழ்ந்தருளிச் செய்தார்.

(2)

772. செவ்வாய் வியாழஞ் சனிஞாயி றேஎன்னும்
இவ்வா றறிகின்ற யோகி இறைவனே
ஒவ்வாத வாயு வலத்துப் புரியவிட்டு
அவ்வா றறிவார்க்கவ் வானந்த மாமே.

(ப. இ.) செவ்வாய், வியாழம், சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் முற்கூறிய முறைப்படி ஓட்டம் அறிபவர் வலமூக்கின் வழியாகச் செலுத்தி அழியாவின்பம் எய்துவர். இவ்வா ரறிகின்ற என்ற பாடத்திற்கு இவ்+ஆர் எனப் பிரித்து இவ் வகையான நிறைந்த மறை எனக் கொள்க. இரகசியம். இனி வார், வாரம் என்பதன் கடைக்குறை எனினும் ஒக்கும்.

(3)

773. மாறி வருமிரு பான்மதி வெய்யவன்
ஏறி இழியும் இடைபிங் கலையிடை
ஊறும் உயிர்நடு வேயுயி ருக்கிரந்
தேறி அறிமின் தெரிந்து தெளிந்தே.

(ப. இ.) திங்கட்கிழமை ஞாயிற்றுக்கிழமைகளில் மூச்சு ஓட்டம் கடக்கவேண்டிய முறைக்கு மாறாக (770) நடந்து ஏறி இறங்குவதும் நடுநாடியிற் புகுவதும் கண்டால் உயிருக்கு இடர்வரும் என எண்ணுதல் வேண்டும். ஊறும் உயிர் - வளருமுயிர்.

(4)

774. உதித்து வலத்திடம் போகின்ற போது
அதிர்த்தஞ்சி யோடுத லாமகன் றாரும்
உதித்தது வேமிக வோடிடு மாகில்
உதித்த விராசி யுணர்ந்துகொ ளுற்றே.

(ப. இ.) அவ்வக் கிழமைகட்குக் கூறிய முறைப்படித் தோன்றி மூச்சு ஓடும்போது சிதறி ஓடினால் இறப்பு நெருங்கும் என்று அஞ்சுக. அவ் வுயிர்ப்பு அளவில்லாமல் ஓடினால் உடன் இறப்பர் என்க. அதிர்த்து - சிதறி. இராசி - ஒழுங்கு.

(5)