413
 

1015 .உத்தமன் சோதி உளனொரு பாலனாய்
மத்திம னாகி மலர்ந்தங் கிருந்திடும்
பச்சிம திக்கும் பரந்து குழிந்தன
சத்திமா னாகத் தழைத்த கொடியே.

(ப. இ.) பெரியோனாகிய சிவபெருமான் பேரொளியாயிருப்பன். அவன் கட்டிளைஞனாய், காளையாய், விளங்கித்தோன்றுவன். மேற்குத் திக்கிலும் பரந்து குழிந்த விடத்துத் திருவருள் உருவாய்த் திகழ்வன். அச் சிவனார்க்குத் திருவுருவாய் அம்மையும் அமைவள். பாலன் - இளைஞன். மத்திமன் - காளை. சத்திமான் - திருவருள் உருவாக உடையவன். கொடி - திருவருளாகிய அம்மை.

(அ. சி.) மத்திமன் - குண்டத்தின் நடு. பச்சிமம் - மேற்கு.

(25)

1016 .கொடியாறு சென்று குலாவிய குண்டம்
அடியிரு கோணமாய் அந்தமும் ஒக்கும்
படியே ழுலகும் பரந்த சுடரை
மடியாது கண்டவர் மாதன மாமே.

(ப. இ.) ஓமகுண்டத்தின்கண் வரையப்பட்ட கோட்டின் வழியே சென்று விளங்கும் அடிப்பகுதியில் இருகோணம் முதலும் முடிவும் ஒத்துள்ள பான்மையாக வரைக. முறையாக ஏழுலகும் நிறைந்திருக்கும் பேரொளிப் பிழம்பாகிய சிவனைச் சோர்வுறாது அகக்கண் கொண்டு நோக்குவோர் செல்வன் கழலேத்தும் செல்வம் எய்தியவராவர். கொடி - கோடு. படி - முறைமை. மாதனம் - திருவடிச் செல்வம்.

(26)

1017 .மாதன மாக வளர்கின்ற வன்னியைச்
சாதன மாகச் சமைந்த குருவென்று
போதன மாகப் பொருந்த உலகாளும்
பாதன மாகப் பரிந்தது பார்த்தே.

(ப. இ.) இறவாப் பெருஞ் செல்வமாக விளங்கும் ஓமத் தீயினைப் பயிற்சி முறையாகச் சமைந்த அறிவிப்பு முறையென்று கொள்ள உலகெலாம் ஆளும் சிவபெருமான் பேரருளோடு ஆழ்ந்து நோக்கியருள்வன். போதனம் - அறிவிப்பு. பார்த்துப்பரிந்தது எனக் கூட்டுக.

(அ. சி.) வன்னி - நவகுண்ட அக்கினி, பாதனமாக - ஆழ்ந்து.

(27)

1018 .பார்த்திடம் எங்கும் பரந்தெழு சோதியை
ஆத்தம தாகவே யாய்ந்தறி வாரில்லை
காத்துட லுள்ளே கருதி இருந்தவர்
மூத்துடல் கோடி யுகங்கண்ட வாறே.

(ப. இ.) எல்லா இடங்களிலும் நிறைந்து விளங்குகின்ற பேரொளியை நமக்கு எஞ்ஞான்றுமுள்ள திருவருள் துணை என்று அறிவாரிலர்.